கடும் சேதத்தை ஏற்படுத்திய ஃபியூகோ எரிமலை வெடிப்பு! 75-க்கும் மேற்பட்டோர் பலி!200-க்கும் மேற்பட்டோர் மாயம்
கடந்த வார இறுதிமுதல் மத்திய அமெரிக்க நாடான கவுதமாலாவில் ஃபியூகோ எரிமலை சாம்பலை கக்கி வருகிறது. அருகேயுள்ள குடியிருப்புப் பகுதிகளில் எரிமலை சாம்பலும், லாவா பாறை குழம்பும் பரவி வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் விரைவாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
திடீரென குடியிருப்புப் பகுதியை தாக்கிய இந்த பேரழிவில் 75-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். 200-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ள சூழலில், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
எரிமலை ஆபத்தான வகையில் புகையை கக்கத்தொடங்கிய போது, உயிருக்கு அஞ்சிய பலர் எஸ்கியூன்டிலா நகரில் இருந்து தங்கள் அலறியடித்து கார்களில் ஒரே நேரத்தில் கிளம்பியதால் அப்பகுதியில் கடுமையான சாலை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கடைசி ஆளை மீட்கும் வரை மீட்புப் பணிகள் தொடரும் என்று தெரிவித்துள்ள அதிகாரிகள், எரிமலை சாம்பல் மற்றும் பாறைக்குழப்பில் சிக்கியவர்கள் உயிர் பிழைத்திருக்கும் வாய்ப்புகள் மிகமிக குறைவு என்றும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
3,763 மீட்டர் உயரம் கொண்ட ஃபியூகோ எரிமலை கடந்த ஞாயிற்றுக்கிழமை வெடித்து சிதறியது. இதனால் அம்மலையை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் 17 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,000-க்கும் மேற்பட்டோர் உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.