தமிழக அரசின் அறிவிப்பின் படி ஆயுள் கைதிகள் 67 பேர் விடுதலை!
10 ஆண்டுகள் தண்டனையை நிறைவு செய்த ஆயுள் கைதிகள் 67 பேர் நன்னடத்தை அடிப்படையில் புழல் சிறையில் இருந்து தமிழக அரசின் அறிவிப்பின் படி விடுவிக்கப்பட்டனர்.
முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, முதற்கட்டமாக கடந்த பிப்ரவரி 25ஆம் தேதியுடன் 10 ஆண்டுகள் தண்டனையை நிறைவு செய்த ஆயுள் தண்டனைக் கைதிகள் 67 பேரை நன்னடத்தை அடிப்படையில் முன் விடுதலை செய்வதாக தமிழக அரசு அறிவித்தது. ஆதாயக் கொலை, போதைப் பொருள் கடத்தல், ஆயுத தடை சட்டத்தில் கைதானவர்கள், வெடிபொருட்கள் பதுக்கல், அரசு சொத்துகளை சேதப்படுத்தியது, உள்ளிட்ட குற்றங்கள் புரிந்தோர், முன் விடுதலைக்கு பரிசீலிக்கப்பட மாட்டார்கள்.
வழக்குகள் நிலுவையில் இருந்தாலும் முன் விடுதலை கிடையாது. இதன் அடிப்படையில், சிறையில் உள்ள நன்னடத்தை பரிந்துரைக் குழு தயார் செய்த பட்டியலின் படி புழல் சிறையில் 10 ஆண்டுகள் தண்டனையை நிறைவு செய்த ஆயுள் கைதிகள் 67 பேர் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிறை வளாகத்தில் நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி அசுதோஷ் சுக்லா, சிறைத்துறை டி.ஐ.ஜி. முருகேசன் ஆகியோர் பங்கேற்றனர்.
சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டவர்கள் நிகழ்ச்சியின் போது பேசுகையில் குடும்பத்தினருடன் மீண்டும் இணையப் போவதை நினைத்தால் மகிழ்ச்சியாக உள்ளதாக தெரிவித்தனர். இளைய சமுதாயத்தினர் குற்றங்கள் புரியக் கூடாது என்று அவர்கள் கூறினர். விடுவிக்கப்பட்ட 67 பேரையும் சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி அசுதோஷ் சுக்லா, கை கொடுத்து வாழ்த்தி அனுப்பி வைத்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.