எல்லா போட்டியிலும் இதேபோல் ஆதரவு அளித்தால்,நாங்கள் உயிரை கொடுத்து விளையாடுவோம்! சுனில் சேத்ரி
இந்திய கால்பந்து அணி தலைவர் சுனில் சேத்ரி ,இதே ஆதரவு நாங்கள் நாட்டுக்காக விளையாடும் ஒவ்வொரு போட்டிகளிலும் கிடைத்தால் களத்தில் உயிரைக் கொடுத்து விளையாடுவோம் தெரிவித்தார்.
இந்தியாவில் நடக்கும் இன்டர்கான்டினென்டல் கால்பந்து போட்டியில் திங்கட்கிழமை கென்யாவுடன் நடந்த போட்டியில் இந்தியா கால்பந்து அணி 3 – 0 கணக்கில் அசாத்தலான வெற்றியை ரசிகர்களுக்கு அளித்தது.
இப்போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரரும், இந்திய அணியின் கேப்டனுமான சுனில் சேத்ரி தனது 100வது சர்வதேச போட்டியில் இரண்டு கோல்களை அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தார்.
வெற்றி பெற்ற இந்திய கால்பந்து அணிக்கு இந்திய ரசிகர்கள் பலரும் தங்கள் வாழ்த்தை சமூக வலைதளங்களில் தெரிவித்தனர். ட்விட்டரில் சுமார் 3000க்கும் அதிகமான ட்வீட்களை பதிவிட்டு இந்திய அளவில் ட்ரெண்ட் செய்து இந்திய கால்பந்து அணிக்கான தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர்.
ரசிகர்கள் ஆதரவு குறித்து இந்திய கால்பந்து அணி தலைவர் சுனில் சேத்ரி தனது ட்விட்டர் பக்கத்தில், “ஒருவேளை இதே ஆதரவு நாட்டுக்காக விளையாடும் ஒவ்வொரு போட்டிகளிலும் கிடைத்தால் களத்தில் நாங்கள் உயிரைக் கொடுத்து விளையாடுவோம் என்று உறுதி அளிக்கிறேன். இந்த இரவு மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் நாம் அனைவரும் இணைந்து இருந்தோம்.
We promise you that if that’s the kind of support we get every time we play for the country, we will give our lives on the pitch. India, this night was special because we were in this together. Those in the stands shouting, and the ones at home cheering – thank you!
— Sunil Chhetri (@chetrisunil11) June 4, 2018
மைதானத்தில் நின்று எங்களுக்காக குரல் எழுப்பியவர்களுக்கும், வீட்டிலிருந்து எங்களுக்கு ஆதரவு அளித்தவர்களுக்கும் நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக சுனில் சேத்ரி ட்விட்டரில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் ‘‘இந்திய கால்பந்து அணிக்கு மக்களும்,ரசிகர்களும் ஆதரவு அளிக்க வேண்டும், இப்போது ரசிகர்களுக்குப் பிடிக்காவிட்டாலும், ஒருநாள் ரசிகர்களுக்கு ஏற்றார்போல் இந்திய கால்பந்து மாறும், களத்துக்கு வந்து ஆதரவு தாருங்கள்” என ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து விராட் கோலி, சச்சின் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு வீரர்கள், சினிமா நட்சத்திரங்கள் சேத்ரிக்கு ஆதரவாக இந்திய ரசிகர்கள் இந்திய கால்பந்து அணிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.