இந்திய முழுவதும் இடைத்தேர்தலில் ஏற்பட்ட படு தோல்வி!மீள்வது எப்படி?பாஜக ஆலோசனை
பாஜக பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தலில் ஏற்பட்ட தோல்வி காரணமாகவும், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெறும் நோக்கத்திலும் கூட்டணிக் கட்சிகளுடன் உறவை வலுப்படுத்த முடிவு செய்துள்ளது.
மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், நாகாலாந்து உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் பாஜக பின்னடைவைச் சந்தித்தது. இதன் எதிரொலியாகவும், 2019 நாடாளுமன்ற பொதுத் தேர்தல் வர இருப்பதை முன்னிட்டும் கூட்டணியில் உள்ள கட்சிளுடன் உறவை மேலும் வலுப்படுத்த பாரதிய ஜனதா முடிவு செய்துள்ளது.
மகாராஷ்டிராவில் கூட்டணியில் இருந்த சிவசேனா கட்சி பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது. இரு கட்சிகளின் இடையே ஏற்பட்ட மோதலின் தொடர்ச்சியாக பாலஸ்- காதேகவுன் தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு சிவசேனா ஆதரவு தெரிவித்தது.
இந்நிலையில் இரு கட்சிகளும் தங்களுக்குள் மீண்டும் இணக்கமான சூழ்நிலையை உருவாக்க முடிவு செய்துள்ளன. இதன் தொடர்ச்சியாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவை, பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா இன்று சந்திக்கிறார். கூட்டணியை புதுப்பிக்கும் வகையில் இந்தச் சந்திப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல் பாஜகவுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள சிரோமணி அகாலிதளம் கட்சித் தலைவர் பிரகாஷ் சிங் பாதலையும் சந்திக்க பாஜக தலைவர் அமித்ஷா சந்தித்துப் பேச உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னதாக மத்திய அமைச்சரும் லோக் ஜனசக்தி கட்சியின் தலைவருமான ராம்விலாஸ் பஸ்வானையும் அமித்ஷா சந்தித்து பீகார் நிலவரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.