புல்வாமா தாக்குதல் குறித்து மத்திய அரசு மீது குற்றசாட்டு வைத்த காஷ்மீர் முன்னாள் ஆளுநருக்கு சிபிஐ சம்மன்.!
புல்வாமா தாக்குதல் குறித்து மத்திய அரசு மீது குற்றசாட்டுகளை முன்வைத்த காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக்கிற்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.
கடந்த 2018- 2019 காலகட்டத்தில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆளுநராக சத்திய பால் மாலிக் நியமிக்கப்பட்டிருந்தார். அந்த காலகட்டத்தில் ஜம்மு காஷ்மீரில் செயல்படுத்தப்பட்ட நீர்மின் திட்டம் மற்றும் அரசு ஊழியர்களுக்கான காப்பீட்டு திட்டங்கள் குறித்து குறிப்பிட்ட நிறுவனங்கள் லஞ்சம் தர முன் வந்ததாக சில நிறுவனங்கள் மீது சத்யபால் மாலிக் குற்றம் சாட்டி இருந்தார்.
இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து அவரிடம் சிபிஐ கடந்தாண்டு அக்டோபர் மாதம் முதற்கட்ட விசாரணையை நடத்தி இருந்தது. இந்த நிலையில் மீண்டும் தற்போது சிபிஐ சத்யபால் மாலிக்கை விசாரணைக்கு ஆஜராக அளித்துள்ளது.
சிபிஐ சம்மன் :
இந்த சம்மன் குறித்து சத்தியபால் மாலிக் கூறுகையில், உண்மையை பேசி சிலரின் பாவச்செயல்களை நான் வெளிக்கொண்டு வந்து இருக்கிறேன். அதனால், தற்போது அழைப்பு வந்துள்ளது. நான் விவசாயி மகன். யாருக்கும் பயப்பட மாட்டேன். ஏற்கனவே இந்த வழக்கு தொடர்பான விஷயங்களை தெளிவுபடுத்தி விட்டேன். மீண்டும் தெளிவு படுத்துவதற்காக நேரில் வரும்படி சிபிஐ அழைத்துள்ளது. நான் ராஜஸ்தான் செல்ல இருப்பதால் ஏப்ரல் 27 முதல் 29 வரையில் உள்ள இடைப்பட்ட காலத்தில் சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராக உள்ளேன் என மாலிக் குறிப்பிட்டு உள்ளார்.
புல்வாமா தாக்குதல் :
இதே சத்யபால் மாலிக் தான் 2019 புல்வாமா பகுதியில் நடந்த தாக்குதல் குறித்தும். துணை ராணுவ படையினர் உயிரிழந்தது குறிக்கும் மத்தி அரசு மீது குற்றச்சாட்டை முன் வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. துணை ராணுவ படையினர் பாதுகாப்பு கருதி ஹெலிகாப்டரில் பயணிக்க அனுமதி கோரியதாகவும், ஆனால் உள்துறை அமைச்சகம் அவர்களுக்கு அனுமதி கொடுக்காததால், தரைவழி பயணம் மேற்கொண்டதாகவும், அதன் காரணமாகவே 40 துணை ராணுவ படையினர் உயரிழந்ததாகவும் குற்றம் சாட்டினார். மேலும் இதுகுறித்து வெளியில் யாரிடமும் பேச வேண்டாம் எனவும் பிரதமர் மோடி தன்னிடம் கூறியதாகவும் மாலிக் தெரிவித்திருந்தது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.