ஆண்களே உஷார் பெண்களை ஆபாசமாக சித்தரித்தால் 7 ஆண்டு சிறை…!
இணையதளத்தில் பெண்களை ஆபாசமாக சித்தரித்து கருத்தோ படமோ வெளியிட்டால், 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கும் வகையில் புதிய சட்டத் திருத்தம் கொண்டுவர மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு ஆணையம் திட்டமிட்டுள்ளது.இணையதளங்களிலும் சமூக வலைதளங்களிலும் பெண்களை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்வது, அவர்கள் மீது வன்முறையை தூண்டுவது மட்டுமில்லாமல், பெண்களின் புகைப்படத்தை மார்பிங் முறையில் ஆபாசமாக சித்தரித்து வெளியிடுவது அதிகரித்துள்ளது.
இதனால் சில பெண்கள் தற்கொலையும் செய்து கொண்டுள்ளனர்.
இவ்வாறு பெண்களை இணையதளங்கள், எஸ்எம்எஸ் மற்றும் எம்எம்எஸ் மூலம் தவறாக சித்தரிப்பவர்கள் மீது 1986 ஆம் ஆண்டு சட்டத்தின் படியே, தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதாவது, முதல்முறை தவறு செய்யும் போது 2 ஆண்டுகளும், இரண்டாவது முறையாக தவறு செய்யும் போது 6 மாதங்கள் முதல் 5 ஆண்டுகள் வரையும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், இணையதளத்தில் பெண்களை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டால் 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கொடுக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.