Today’s Live: கொரோனா தொற்று அதிகரிப்பு..! மத்திய அரசு கவலை..!
மத்திய அரசு கடிதம் :
கொரோனா பரவலை கட்டுப்படுத்த அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்துமாறு மத்திய அரசு தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. ஏப்ரல் 3ஆவது வாரத்தில் 11 மாவட்டங்களில் பாசிட்டிவிட்டி விகிதம் 10 சதவீதத்துக்கு மேல் இருந்தது கடிதத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இதுபோல, தமிழ்நாடு உள்ளிட்ட கொரோனா பரவல் அதிகம் உள்ள 8 மாநிலங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
21.04.2023 4:15 PM
தங்க கடத்தல்:
துபாயிலிருந்து வந்த பயணி ஒருவரை சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் தடுத்து நிறுத்தி, ரூ.60.58 லட்சம் மதிப்பிலான 1,128 கிராம் எடையுள்ள 24 கேரட் தூய்மையான தங்கத்தை மடக்கிப் பிடித்தனர். சுங்கச் சட்டத்தின் கீழ் கைப்பற்றப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டன.
21.04.2023 2:30 PM
தமிழ்நாடு சட்டப்பேரவை:
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. 17 சட்ட மசோதாக்கள் இந்த கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
21.04.2023 2:00 PM
அதிமுகவிற்கு வெற்றி :
கர்நாடகாவில் புலிகேசி நகர், கோலார் தங்க வயல், காந்தி நகர் ஆகிய 3 தொகுதிகளில் போட்டியிட இருந்த ஓபிஎஸ் ஆதரவாளர்களின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், தலைமை தேர்தல் ஆணையம் இபிஎஸ்சை பொதுச் செயலாளராக அங்கீகரித்ததால், புலிகேசி நகர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் அன்பரசனின் வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்பட்டது. இது இபிஎஸ் தலைமையிலான அதிமுகவிற்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது.
21.04.2023 1:30 PM
காவல்துறை மானியக் கோரிக்கை :
காவல்துறையில் மற்ற பிரிவுகளில் உள்ள காவல் பணியாளர்களைப் போலவே, சிறப்பு காவல் அணிகளில் உள்ள காவலர்களுக்கும் வார விடுமுறை அளிக்கப்படும், சென்னை மாநகர காவலர்களுக்கு வழங்குவது போலவே, தாம்பரம் மற்றும் ஆவடி மாநகர காவலர்களுக்கும் மாதம் 26 நாட்கள், நாளொன்றுக்கு ரூ.300 உணவுப்படியாக வழங்கப்படும் என்று காவல்துறை மானியக் கோரிக்கையில் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
21.04.2023 12:30 PM
சிறுவன் நரபலி :
ஹைதராபாத் சனத்நகர் பகுதியில் திருநங்கை ஒருவர், 8 வயது சிறுவனை நரபலி கொடுத்ததாக கூறப்படுகிறது. நேற்று அப்துல் வஹீத் என்ற சிறுவனை காணவில்லை என அவனது பெற்றோர்கள் மற்றும் போலீசார் தேடி வந்துள்ளனர். அப்போது சிறுவனின் உடல் கால்வாயில் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து. அமாவாசை தினத்தில், திருநங்கை ஒருவர் சிறுவனை நரபலி கொடுத்ததாக சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள், அவரது வீட்டை தாக்கினர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
21.04.2023 11:30 AM
அதிமுக வெளிநடப்பு வேதனை:
மானியக்கோரிக்கை விவாதத்தில் முதல்வர் ஸ்டாலின் பதிலுரையின் போது அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர். இது குறித்து சபாநாயகர் அப்பாவு, ஜனநாயக முறைப்படி அனைவருக்கும் வாய்ப்பு வழங்கி வருகிறோம், அரசு ஒளிவு மறைவு இல்லாமல் இயங்கி வருகிறது. படிப்படியாக நேரடி ஒளிபரப்பு நடைபெறும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையை விட்டு சென்றது வருத்தமாக உள்ளது என்றார்.
21.04.2023 11:15 AM
சட்டப்பேரவையில் முதலமைச்சர் :
பிற மாநிலங்களில் நடந்த சம்பவங்களை தமிழ்நாட்டில் நடந்தது போல சித்தரித்து புலம் பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்திகள் பரபப்பட்டன. இது குறித்து உடனடியாக ஆலோசனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு அறிவுறுத்தினேன் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரை தொடர்புகொண்டு புலம் பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து உறுதி அளித்தேன் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
21.04.2023 11:05 AM
ராணுவ அழைப்பு :
உக்ரைனுக்கு எதிரான போரில் ஏராளமான வீரர்களை இழந்துள்ள ரஷ்யா, ராணுவத்தில் சேர குடிமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு ராணுவம், வீடியோ விளம்பரங்கள் மற்றும் போஸ்டர்களை வெளியிட்டுள்ளது. 4 லட்சம் பேரை தேர்வு செய்ய உள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து ஓராண்டுக்கு மேல் ஆன நிலையில், போர் தற்போது முடிவுக்கு வருவதுபோல் தெரியவில்லை.
21.04.2023 10:10 AM