அதானியை சந்தித்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார்.? திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி விமர்சனம்.!
சரத் பவார் – அதானி சந்திப்பு. ஹிண்டன்பர்க் அறிக்கையை கொண்டு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் வரை எந்த அரசியல்வாதியும் அதானியை சந்திக்க கூடாது. – திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா.
இந்திய பங்குசந்தையில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய அமெரிக்க ஹிண்டன்பர்க் அறிக்கையை தொடர்ந்து இந்திய தொழிலதிபர் அதானி நிறுவன பங்குகள் பெரும் வீழ்ச்சியடைந்தன. முறைகேடாக அதானி பங்குசந்தையில் ஈடுபடுகிறார் என ஹிண்டன்பர்க் அறிக்கை கூறியிருந்தது. இந்த சம்பவம் நாடாளுமன்றத்தையே பல நாட்கள் முடக்கியது என்று கூறலாம்.
சரத் பவார் கருத்து :
அந்தளவுக்கு பங்குசந்தையில் பாதிப்பை ஏற்படுத்திய ஹிண்டன்பர்க் அறிக்கை – அதானி நிறுவனம் தொடர்பாக உரிய விசாரணை குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் தொடர் அமளியில் ஈடுபட்டு வந்தனர். ஆனால், எதிர்க்கட்சிகளின் முக்கிய தலைவராக இருக்கும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் இதில் இருந்து மாறுபட்டு கருத்து தெரிவித்து வந்தார். நாட்டில் பேச வேண்டிய பிரச்சனைகள் நிறைய இருக்கிறது. தொழிலதிபர்களை குறிவைக்க வைக்க வேண்டாம் என்றவாறு பேசினார். எதிர்க்கட்சியினர் மத்தியில் இந்த பேச்சு சிறிய அதிர்வலையை ஏற்படுத்தியது என்றே கூறலாம்.
திரிணாமுல் காங்கிரஸ் எம்பி :
இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) தலைவர் சரத் பவார் நேற்று (வியாழன்) தொழிலதிபர் கவுதம் அதானியை தெற்கு மும்பையில் உள்ள சில்வர் ஓக் இல்லத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பு கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் நீடித்ததாக தகவல் வெளியானது. இந்த தகவலை அடுத்து திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா தனது டிவிட்டர் பக்கத்தில் ஓர் விமர்சனத்தை முன் வைத்தார்.
மொய்த்ரா விமர்சனம் :
தனது ட்விட்டர் பக்கத்தில்., ‘அதானி தனது நண்பர்கள் (அ) இடைநிலை நபர்கள் மூலம் என்னையும் இன்னும் சிலரையும் தொடர்பு கொள்ள மிகவும் முயன்றார். அவரால் எங்கள் வீட்டு கதவை கண்டுபிடிக்க முடியவில்லை, அதானியுடன் நேருக்கு நேர் நான் விவாதிக்க எதுவும் இல்லை. ஹிண்டன்பர்க் அறிக்கையை கொண்டு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் வரை எந்த அரசியல்வாதியும் இந்த மனிதருடன் (அதானி) சந்திக்க கூடாது என கேட்டுக்கொள்கிறேன் என சரத் பவார் – அதானி சந்திப்பை மறைமுகமாக விமர்சித்தார் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா. மேலும், எனக்கு பெரிய மராட்டியர்களை பற்றி பேசுவதில் எந்த பயமும் இல்லை” என்று குறிப்பிட்டார்.
Adani tried utmost to get to me & few
others through his friends/ wheeler dealers. He couldn’t even find the door, let alone get past it. I have nothing to discuss on 1:1 basis with Adani.
I firmly believe till govt takes action no politician should engage with this man.— Mahua Moitra (@MahuaMoitra) April 20, 2023