#IPL Breaking: பரபரப்பான ஆட்டம்.. லக்னோ அணி த்ரில் வெற்றி..!
ஐபிஎல் தொடரின் இன்றைய RR vs LSG போட்டியில், லக்னோ அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி.
16-வது ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் விளையாடினர். இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன், முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதன்படி, லக்னோ அணியில் தொடக்க வீரர்களாக முதலில் களமிறங்கிய, ராகுல் மற்றும் மேயர்ஸ் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த இருவரும் ஆட்டமிழந்த நிலையில் ஸ்டோனிஸ்(21 ரன்கள்) மற்றும் பூரன்(28 ரன்கள்) இருவரும் இணைந்து அணியின் ஸ்கோரை ஓரளவு உயர்த்தினர். முடிவில் லக்னோ அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 154 ரன்கள் குவித்துள்ளது.
இதனையடுத்து, 155 ரன்கள் என்ற வெற்றி இலக்கில் ராஜஸ்தான் அணியில், தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர் களமிறங்கினர். இருவரும் பொறுப்புடன் விளையாடி ரன்களை எடுத்த நிலையில் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட யஷஸ்வி ஜெய்ஸ்வால் 44 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து, களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் 2 ரன்களில் வந்த வேகத்தில் விக்கெட்டை இழந்து வெளியேறினார். பட்லர் ஆட்டமிழந்த நிலையில் படிக்கல் களமிறங்கினார்.
கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் பராக் மற்றும் படிக்கல் களத்தில் இருந்தனர். முடிவில் ராஜஸ்தான் அணி 144 ரன்கள் மட்டும் அடிக்க தோல்வியைத் தழுவியது. இதனால், லக்னோ அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் 44 ரன்களும், ஜோஸ் பட்லர் 40 ரன்களும், தேவ்தட் படிக்கல் 26 ரன்களும் குவித்துள்ளனர். லக்னோ அணியில் அவேஷ் கான் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்டுகளையும், மார்கஸ் ஸ்டோனிஸ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.