ஹிஜாவு மோசடி – 5000 பேரின் விவரங்கள் பொருளாதார குற்றப்பிரிவிடம் ஒப்படைப்பு.!
ஹிஜாவு நிதி நிறுவன மோசடியால் ஏமாந்தவர்களின் 5,000 பேரின் பட்டியல் ஒப்படைக்கபட்டுள்ளது.
சென்னை கீழ்பாக்கத்தில் ஹிஜாவு எனும் பெயரில் நிதி நிறுவனம் ஒன்று இயக்கி வந்தது. இதில் முதலீடு செய்யும் பணத்துக்கு 15 சதவீதம் வட்டி தொகை தருவதாக அந்த நிறுவனம் சில விளமபரங்களை வெளியிட்டது. விளம்பரத்தை நம்பி 89 ஆயிரம் பேர் ஏமாந்தனர்.
இந்த 89-ஆயிரம் பேரிடம் இருந்து ரூ.4 ஆயிரத்து 400 கோடி வரை இந்த நிறுவனம் மோசடி செய்தது. இதனையடுத்து, இதில் பணத்தைக் கட்டி இழந்த மக்கள் பொருளாதார குற்றப்பிரிவுகள் புகார்கள் அளித்தனர். அதன் அடிப்படையில், 19 துணை நிறுவனங்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
மேலும், இந்த நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர், தலைவர், துணை நிறுவனத்தின் இயக்குனர்கள், கமிட்டி உறுப்பினர்கள், ஏஜெண்டுகள், அலுவலக பணியாளர்கள் என மொத்தமாக 52 பேர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்கள்.
இந்நிலையில், 150 பேர் திரண்டு சென்று பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை பொருளாதார குற்றப்பிரிவிடம் ஒப்படைத்தனர். கிட்டத்தட்ட 5,000 பேரின் பட்டியல் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும், இவ்வழக்கில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டு, 162 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.