கட்டுக்கட்டாக பணமா? அண்ணாமலை பயணித்த ஹெலிகாப்டரில் சோதனை!
காங்கிரஸ் வேட்பாளர் புகார் கூறியதன் அடிப்படையில், அண்ணாமலை சென்ற ஹெலிகாப்டரில் சோதனை.
கர்நாடக மாநில சட்டப் பேரவைத் தேர்தல் வரும் மே மாதம் 10-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. அம்மாநிலத்தில் மொத்தம் 224 சட்டமன்றத் தொகுதிகள் உள்ள நிலையில், மீண்டும் ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்ற முனைப்பில் பாஜகவும், இழந்த ஆட்சியை திரும்ப பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸும் போட்டிபோட்டு கொண்டு தேர்தல் களத்தில் இறங்கியுள்ளது.
தேர்தல் பிரச்சாரம்:
இதற்கான வேட்பாளர் பட்டியலும் இரண்டு கட்சிகளும் வெளியிட்டு வருகிறது. பாஜக சார்பில் பிரதமர், உள்துறை அமைச்சர், ஜே.பி.நட்டா உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதேபோன்று காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தலைவர்களும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
அண்ணாமலை மீது குற்றச்சாட்டு:
தேர்தலில் போட்டியிட சீட் வழங்காததால் பாஜகவில் இருந்து பல மூத்த தலைவர்கள் விலகி காங்கிரஸில் இணைந்து வரும் நிலையில், தற்போது கர்நாடக பாஜக தேர்தல் பொறுப்பாளர் அண்ணாமலை மீது புதிய குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. அதாவது, சமீபத்தில் தேர்தல் பணிக்காக கர்நாடகத்தில் உள்ள உடுப்பி மாகாணத்திற்கு அண்ணாமலை ஹெலிகாப்டரில் சென்றார். ஹெலிகாப்டரில் வந்தது பல சர்ச்சைகளையும் பல கேள்விகளையும் ஏற்படுத்தியுள்ளது.
ஹெலிகாப்டரில் சோதனை:
கர்நாடகத் தேர்தலுக்காக அண்ணாமலை ஹெலிகாப்டரில் பணம் மூட்டைகளை எடுத்து வந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பயணித்த ஹெலிகாப்டரில் கர்நாடகா தேர்தல் அதிகாரிகள் சோதனை நடத்தியதாக தகவல் கூறப்படுகிறது. அண்ணாமலை உடுப்பி சென்றபோது அவரது ஹெலிகாப்டரில் தேர்தல் அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர் எனவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.
காங்கிரஸ் வேட்பாளர் புகார்:
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்ற ஹெலிகாப்டரில் கட்டுக்கட்டாக பணம் கொண்டு செல்லப்பட்டதாக காங்கிரஸ் வேட்பாளர் வினய்குமார் புகார் அளித்துள்ளார். உடுப்பி தொகுதி வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக அண்ணாமலை பணம் கொண்டு வந்ததாக குற்றசாட்டியுள்ளனர். இந்த நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் வினய்குமார் புகார் கூறியதன் அடிப்படையில் ஹெலிகாப்டரில் சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.