காங்கிரஸுக்கு எதிராக காங்கிரஸ்.? எந்த முகத்தை வைத்து வாக்கு கேட்போம்.? சச்சின் பைலட் காட்டம்.!
ஊழல் நடவடிக்கை குறித்து, மக்களிடம் எந்த முகத்தை வைத்து வாக்கு கேட்போம் என காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் விமர்சனம் செய்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக அசோக் கெலாட் பதவியில் இருந்து வருகிறார். அங்கு ஆளும் கட்சிக்கு உள்ளையே இரு பிரிவுகளாக ஒரு பனிப்போர் நிகழ்ந்து வருகிறது. இளம் காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவே அண்மையில் உண்ணாவிரதம் போராட்டத்தை மேற்கொண்டார்.
உண்ணாவிரதம் :
அதாவது காங்கிரஸ் ஆட்சிக்கு வருகையில் முந்தைய பாஜக ஆட்சியில் நடைபெற்ற ஊழல் குற்றச்சாட்டுகளை முறையாக விசாரிப்போம் என்று தேர்தல் வாக்குறுதிகளில் கொடுக்கப்பட்டிருந்ததாகவும், அதனை தற்போது வரை அசோக் கெலாட் தலைமையிலான அரசு விசாரிக்கவில்லை என்றும் சச்சின் பைலட் குற்றச்சாட்டை முன்வைத்து தனது ஆதரவாளர்களுடன் உண்ணாவிரதத்தை மேற்கொண்டார்.
மாநில அரசு மீதான விமர்சனம் :
இது பற்றி இன்று செய்தியாளர்களிடம் சச்சின் பைலட் கூறுகையில், நான்கு ஆண்டுகளில் பாஜக ஊழல் பற்றி எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த வருட இறுதியில் ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அப்போது எந்த முகத்தை வைத்துக்கொண்டு பொதுமக்களிடம் வாக்கு கேட்பது? என்று தனது விமர்சனத்தை முன் வைத்தார். மேலும், ஊழல் விவகாரத்தில் தான் சமரசம் செய்து கொள்ளப்போவதில்லை என்றும் சச்சின் பைலட் திட்டவட்டமாக தெரிவித்தார்.
வார்த்தைகள் :
மேலும், நான் எதிர்ப்பு தெரிவித்தால் அதனை வெளிப்படையாக தெரிவிப்பேன். எனது வார்த்தையில் நான் கட்டுப்பாட்டை இழக்கமாட்டேன். மேலும், எனது வாயிலிருந்து வரும் வார்த்தைகளை திரும்ப பெறவும் மாட்டேன். இதனால் பல நெருக்கடியான சூழ்நிலைகளை நான் சந்தித்துள்ளேன். தெருவில் இறங்கி தர்ணா போராட்டம் வரை நான் நடத்தி விட்டேன். சிறைக்கு சென்றுள்ளேன். எப்போதும் நான் தவறான வார்த்தைகளை பயன்படுத்தியது இல்லை எனவும் சச்சின் பைலட் குறிப்பிட்டுள்ளார்.
பாஜக ஊழல் :
எந்த பிரச்சனையை நான் கூறினாலும் அதனை எழுத்துப்பூர்வமாக தான் கொடுத்துள்ளேன். மாநில அரசியலை தூய்மையானதாக மாற்றுவதற்கு முயற்சி செய்கிறேன். அதனை தான் நமது இளைஞர்களும் விரும்புகிறார்கள். பாஜக ஆட்சியின் ஊழல்களை விசாரிக்க ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தேன். தற்போது ஒரு வாரம் ஆகிவிட்டது. இன்னும் அது குறித்து எந்தவித நடவடிக்கையும் மாநில அரசு எடுக்கவில்லை என்று காங்கிரஸ் ஆட்சி பற்றி காங்கிரஸ் இளம் தலைவர் சச்சின் பைலட் விமர்சனம் செய்துள்ளார்.
ஆலோசனை கூட்டம் புறக்கணிப்பு :
இன்று ஜெய்பூரில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா, முதல்வர் அசோக் கெலாட் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் தோதாஸ்ரா ஆகிய முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டத்தை சச்சின் பைலட் புறக்கணித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. சச்சின் பைலட் நடவடிக்கைகள் காங்கிரஸ் தலைமைக்கு சற்று கலக்கத்தை கொடுத்துள்ளது என்றே கூறப்படுகிறது.