ஜெயலலிதா மற்றும் சசிகலாவை கம்பி எண்ண வைத்ததும் இந்த சட்டத்துறைதான் – அமைச்சர் உதயநிதி
ஜெயலலிதாவை A1 ஆகவும், அவரது நெருங்கிய தோழி சசிகலாவை A2 வாக கம்பி எண்ண வைத்ததும் இந்த சட்டத்துறைதான் என அமைச்சர் உதயநிதி பேச்சு.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், திமுக சட்ட பிரிவு சார்பாக ஒன்றியமும் மாநிலமும் என்ற தலைப்பில் போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.
உதயநிதி பேச்சு
இந்த விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர் திமுகவில் எப்போதும் நம்பர் ஒன் அணி என்றால், அது சட்டத்துறை தான். ஜெயலலிதாவை A1 ஆகவும், அவரது நெருங்கிய தோழி சசிகலாவை A2 வாக கம்பி எண்ண வைத்ததும் இந்த சட்டத்துறைதான் என விமர்சித்துள்ளார்.
மேலும், இரண்டு மாதங்களுக்கு முன்பதாக தமிழக ஆளுநர் ரவி தமிழ்நாட்டின் பெயரை தமிழகம் என மாற்றிக் கொள்ளுங்கள் என தெரிவித்தார். தற்போது திமுக ஆட்சியில் இல்லாமல், இபிஎஸ் ஆட்சியோ அல்லது ஓபிஎஸ் ஆட்சியோ இருந்திருந்தால் தற்போது தமிழ்நாட்டின் பெயரை மாற்றி இருப்பார்கள். இதனை எதிர்த்து குரல் கொடுத்தவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் என தெரிவித்துள்ளார்.