பல் பிடிங்கி சித்தரவதை – பல்வீர் சிங் மீது தமிழக காவல்துறை வழக்குப்பதிவு!
பல் பிடுங்கிய விவகாரத்தில் இரண்டாம் கட்ட விசாரணை நடந்து வரும் நிலையில், பல்வீர் சிங் மீது வழக்குப்பதிவு
நெல்லை அம்பாசமுத்திர காவல்நிலையத்தில் கைதிகளின் பற்களை பிடுங்கிய சித்தரவதை செய்த விவகாரத்தில் ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது தமிழக காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. அம்பாசமுத்திர ஏஎஸ்பியாக இருந்த பல்வீர் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், தற்போது வழக்கு பதிவும் செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் நெல்லை மாவட்ட எஸ்பியிடம் அளித்த புகாரின் அடிப்படையில் பல்வீர் சிங் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது தமிழக காவல்துறை. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் உதவி காவல் கண்காணிப்பாளராக இருந்த பல்வீர் சிங், இந்த புகார்களை அடுத்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இதன்பின் பல் பிடுங்கிய புகாரியில் உயர்மட்ட விசாரணை குழு அதிகாரியாக அமுதாவை தமிழக அரசு நியமித்துள்ளது. அதன்படி, பல் பிடுங்கிய விவகாரத்தில் அதிகாரி அமுதா இரண்டாம் கட்ட விசாரணை நடத்தி வரும் நிலையில், வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆயுதத்தை பயன்படுத்தி கொடுங்காயம் ஏற்படுத்துதல், சித்தரவதை செய்தல் போன்ற குற்றங்களுக்காக இந்திய தண்டனை சட்டம் பிரிவு 326-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.