அதிமுக அவசர செயற்குழு கூட்டம் தொடங்கியது..!
சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அதிமுக அவசர செயற்குழு கூட்டம் தொடங்கியுள்ளது.
சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் அதிமுக அவசர செயற்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க வந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட பின் நடைபெறும் முதல் கூட்டம் இதுவாகும். கர்நாடக சட்டமன்ற தேர்தலில் அதிமுக போட்டியிடுவது தொடர்பாக கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செயற்குழு கூட்டத்தில் 70 மாவட்டச் செயலாளர்கள் உட்பட 320 பேர் பங்கேற்றுள்ளனர்.
முன்னதாக, அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பிறகு, அதிமுக பொது செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு ஒப்புதல் அளிக்க வேண்டியிருக்கும் நிலையில் அதிமுக அவசர செயற்குழு கூட்டம் தொடங்கியுள்ளது.