கிரிக்கெட் சூதாட்ட செயலியால் 90 லட்சம் கடன்.? கோவை இளைஞர் தற்கொலை.!
கோவை இளைஞர் தனியார் ஹோட்டலில் பூச்சிமருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார். அவர் கிரிக்கெட் சூதாட்ட செயலியால் ரூ.90 லட்சம் இழந்ததாக கூறப்படுகிறது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த சபாநாயகம் எனும் 35வயது நபர் கோவை, தனியார் ஹோட்டல் அறையில் தற்கொலை செய்துகொன்டுள்ளார். கார் டீலர் தொழில் செய்து வந்த சபாநாயகம் நேற்று மதியம் கோவை காந்திநகர் பகுதியில் உள்ள ஓர் தனியார் ஹோட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் கதவை திறக்காததால் சந்தேகமடைந்த ஹோட்டல் ஊழியர்கள், அவர் இருந்த அறையை திறந்து பார்த்துள்ளனர்.
ஆன்லைன் கிரிக்கெட் சூதாட்டம் :
அப்போது அவர் உயிரிழந்து சடலமாக இருந்தது தெரியவந்துள்ளது. உடனடியாக, காவல்துறைக்கு ஹோட்டல் ஊழியர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், சபாநாயகம் பூச்சி மருந்து உட்கொண்டு உயிரிழந்தது தெரியவந்துள்ளது. மேலும் அவர், ஆன்லைன் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
90 லட்சம் கடன் :
காவல்துறை முதற்கட்ட விசாரணையில், அவர் 90 லட்ச ரூபாய் வரையில் பணத்தை ஆன்லைன் கிரிக்கெட் சூதாட்ட செயலியில் இழந்ததாகவும், அதனால் அதிக கடனில் சிக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் தான், சபாநாயகம் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. இருந்தும், இதனை உறுதிப்படுத்தும் வேலையிலும், வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்ற கோணத்திலும் காவல்துறையினர் தங்கள் விசாரணையை மேற்கொன்டு வருகின்றனர்.
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் :
அண்மையில் தான் தமிழக சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்டதிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அரசின் பலகட்ட நடவடிக்கைகளுக்கு பிறகு கையெழுத்திட்டார் என்பதும், ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை முழுதாக நடைமுறைப்படுத்த தமிழக அரசு அடுத்தகட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.