மகளுடன் போராட்டத்தில் ஈடுபட்ட தலைமை காவலர் – விசாரணைக்கு பரிந்துரை..!
தலைமை காவலர் மகளுடன் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் விசாரணைக்கு பரிந்துரை.
சென்னை, ஆவடி காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் கோதண்டபாணி, 42. இவர், ஓட்டேரி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் பிரதிக்ஷா, தற்போது அவருக்கு வயது 10. இவருக்கு மூன்று வயது இருக்கும் போதே சிறுநீரகப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அங்கு அவருக்கு பரிந்துரைத்த மாத்திரைகளை கோதண்டபாணி 5 ஆண்டுகளாக கொடுத்து வந்துள்ளார். பின் பிரதிக்ஷாவிற்கு வலது காலில் அரிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, இரண்டு முறை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்த்து இதற்காக சிகிச்சை பெற்றுள்ளார். பின், ரத்த உரைத்தல் ஏற்பட்டு வலது கால் மற்றும் இடது கையும் செயலிழந்துள்ளது. அதற்கான காரணம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் எதுவும் தெரிவிக்கவில்லை என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் கோதண்டபாணி நேற்று முன்தினம் தனது மகள் பிரதிக்ஷாவுடன் கோட்டை முன்பதாக அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவர் தனது மகள் தவறான சிகிச்சையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
விசாரணைக்கு பரிந்துரை
மகளுக்கு தவறான சிகிச்சை அளித்ததாக சென்னை தலைமைச்செயலகம் முன்பு மகளுடன் தலைமை காவலர் கோதண்டபாணி போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், காவலரின் மகளுக்கு தவறான சிகிச்சை அளித்தது குறித்து மருத்துவ விசாரணை நடத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதன்படி, காவலரின் புகாரை பெற்றுக் கொண்ட ஓட்டேரி போலீசார், மருத்துவ கல்வி இயக்குனரகத்திற்கு பரிந்துரை செய்துள்ளது.