குன்னூரில் தண்ணீர் தட்டுப்பாடு! 1000 லிட்டர் ரூ.900-க்கு விற்பனை !மக்கள் வேதனை..!
குன்னூரில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக 1000 லிட்டர் தண்ணீர் ரூ.900-க்கு விற்கப்படுவதாக அங்கு வசிக்கும் மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களாக பெய்த மழையினால் குன்னூர் நகரத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் ரேலியா அணை நிரம்பும் தருவாயில் உள்ளது. ஆனால் நீரேற்று நிலையங்களில் உள்ள மோட்டாரை நகராட்சி நிர்வாகம் சரி செய்யாததால் குடிநீர் விநியோகம் முற்றிலும் தடைப்பட்டுள்ளது. மழை பெய்தும் தண்ணீரை அதிக விலை கொடுத்த வாங்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளதாக குன்னூர் மக்கள் கடும் வேதனை தெரிவித்துள்ளனர்.
இது பற்றி அதிகாரிகளிடம் பல முறை மனு கொடுத்தும் பலனில்லை என மக்கள் கூறினர். ரூ.900 செலவழித்து தண்ணீரை வாங்கும் நிலையில் தாங்கள் இல்லை என கூறினர். பழுதான மின்மோட்டாரை சரிசெய்ய நகராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டு. இதனால் மலைவாழ் மக்கள் நீண்ட தூரம் சென்று ஆறுகள், ஊற்றுகளில் குடிநீர் எடுத்து வருவதால் சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர்.