#Amazon: 27,000 ஊழியர்கள் அதிரடி பணிநீக்கம்.! CEO கொடுத்த விளக்கம்….
அமேசான் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி, தனது நிறுவனத்தில் இருந்து 27,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது, மிகவும் கடினமான செயல் என்று ஒப்புக்கொண்டார்.
அமேசான் நிறுவனம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜனவரி மாதம், முதல் கட்டமாக 18,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ததை தொடர்ந்து, இரண்டாம் கட்ட பணிநீக்கமாக, மேலும் 9000 பேரை பணிநீக்கம் செய்துள்ளதாக கடந்த மாதம் அறிவித்தது. இந்நிலையில், இந்த ஆண்டு மட்டும் அமேசான் மொத்தமாக 27,000 பேரை பணிநீக்கம் செய்துள்ளது. தற்போது, 27,000 ஊழியர்களின் பணிநீக்கம் குறித்து அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி ஆண்டி ஜாஸ்ஸி முக்கிய கருத்துக்களை தெரிவித்தார்.
அதாவது, அமேசான் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆண்டி ஜாஸ்ஸி, தனது பங்குதாரர்களுக்கு வருடாந்திர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், அமேசான் நிறுவனம் அண்மைய காலத்தில் சந்தித்த கடினமான சூழ்நிலைகள் குறித்தும், செலவுக் குறைப்பு நடவடிக்கைகள் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உதவும் என்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் அதில், 27,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வது போன்ற சில நடவடிக்கைகள் கடினமானவை என்று நிர்வாகி ஒப்புக்கொண்டார். ஆனால், இந்த முடிவு நிறுவனத்திற்கு நல்ல பலனைத் தரும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கைகள் அனைத்தும் நிறுவனத்தின் ஒட்டுமொத்த செலவுகளை ஒழுங்கமைக்க நிறுவனத்திற்கு உதவும் எனவும், நிறுவனத்தின் எதிர்காலம் குறித்து ஆழமாக ஆய்வு செய்த பிறகே இந்த பணி நீக்கம் முடிவு எடுக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.