நான்கு போட்டிகளில் கூட விளையாட முடியாவிட்டால் பயிற்சி எடுத்து என்ன பயன்..! ரவி சாஸ்திரி காட்டம்..!
இந்திய வேகப்பந்து வீச்சாளர்களை, இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்திய வேகப்பந்து வீச்சாளர்களின் உடற்தகுதி குறித்து இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி விமர்சித்துள்ளார். இஎஸ்பிஎன் கிரிக் இன்போவிடம் அளித்த பேட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள், இந்தியாவிற்கான போட்டிகளில் விளையாடுவதை விட என்சிஏவில் (National Cricket Academy) அதிக நேரத்தை செலவிடுவது குறித்து சாஸ்திரி தனது கருத்தை தெரிவித்தார்.
அதன்படி, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடும் போது தீபக் சாஹருக்கு தொடையில் காயம் ஏற்பட்டது. இது ஐந்து மாதங்களில் அவருக்கு ஏற்பட்ட இரண்டாவது காயமாகும் என்று கூறினார். காயம் ஏற்படுவது சகஜம் என்பதை புரிந்துகொள்கிறேன். ஆனால், தொடர்ந்து காயங்கள் ஏற்படுவது நல்ல அறிகுறி அல்ல.
மேலும், கடந்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளில், முக்கியமான சில வீரர்கள் என்சிஏ-வின் நிரந்தர குடியிருப்பாளர்களாக மாறியுள்ளனர். விரைவில் அவர்கள் அங்கேயே தங்கி விடுவார்கள். என்சிஏவில் தங்கி பயிற்சி எடுத்துவிட்டு நான்கு போட்டிகளில் கூட விளையாட முடியாவிட்டால் பயிற்சி எடுத்து என்ன பயன் எனக் கூறிய சாஸ்திரி, நீங்கள் எதற்காக என்சிஏக்கு செல்கிறீர்கள்.? என்று இந்திய வேகப்பந்து வீச்சாளர்களை கடுமையாக விமர்ச்சித்துள்ளார்.