இனி நில ஆவணங்களின் விவரம் அறிய புதிய செயலி; சட்டப்பேரவையில் அறிவிப்பு.!
நில ஆவணம் தொடர்பான விவரங்களுக்கு இனி, புதிய செயலி உருவாக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் பல்வேறு துறைகளின், மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் 19 புதிய அறிவிப்புகளை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் வெளியிட்டார்.
இதன்படி இடம் சார்ந்த நில ஆவணங்களின் விவரங்களை அறிவதற்கு, புதிய செயலி உருவாக்கப்படும் என அறிவித்தார். நிலம் சம்பந்தப்பட்ட விவரங்கள் அடங்கிய புதிய செயலி உருவாக்கப்படும் என தனது அறிவிப்பில் அமைச்சர் வெளியிட்டார்.
மேலும் தமிழ்நாடு நில சீர்திருத்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ‘குடும்பம்’ என்ற வரையறையில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் சம உரிமை வழங்கும் பொருட்டு திருமணம் ஆகாத மகள்கள் மற்றும் திருமணமாகாத பேத்திகள் என்ற சொற்கள் நீக்கப்படும் எனவும் சட்டப்பேரவையில் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அறிவித்தார்.
முன்னதாக வட்டாட்சியர், கோட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்கள் ஆன்லைன் வாயிலாக வழங்கப்படும் என தெரிவித்திருந்தார்.