மின்வாரிய ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ்..! ஊதிய உயர்வுக்கு ஒப்புதல் அளித்தது மின்வாரியம்..!
மின்வாரிய ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மின் வாரிய ஊழியர்களுக்கான ஊதிய உயர்வுக்கான அறிவிப்பை தமிழ்நாடு மின்வாரியம் வெளியிட்டுள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, 2019 டிசம்பர் முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வை வழங்க வேண்டும் என்று ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்தனர். ஆனால், நீதிமன்றம் இந்த போராட்டத்திற்கு தடை விதித்தது.
இந்நிலையில், மின் வாரிய ஊழியர்களின் ஊதிய உயர்வு தொடர்பாக 19 தொழிற்சங்கங்களின் நிர்வாகிகளுடன் அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கூட்டத்தில் மின்வாரிய ஊழியர்களின் ஓய்வூதியம், ஊதிய உயர்வு, அகவிலைப்படி உயர்வு போன்ற பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
அதன்படி, இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் 2019ஆம் ஆண்டு டிசம்பர் 1 அன்று போட வேண்டிய ஊதிய ஒப்பந்தப்படி, மின்வாரிய ஊழியர்கள் 6% ஊதிய உயர்வு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 20 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய ஊழியர்களுக்கு 3% வெயிட்டேஜும் வழங்கப்படும் என மின்வாரியம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வு மூலம் மின்வாரிய ஊழியர்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.