பொறியியல் கல்லூரிகளில், நான் முதல்வன் திறன் மற்றும் வேலை வாய்ப்பு மையம் நிறுவப்படும்; அமைச்சர் உதயநிதி.!
வேலைவாய்ப்பை ஊக்கப்படுத்தும் பொருட்டு, நான் முதல்வன் திறன் மற்றும் வேலை வாய்ப்பு மையம் நிறுவப்படும் என உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு.
தமிழக சட்டபேரவையில் இன்று விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறையின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்திற்கு விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பேரவையில் உரையாற்றினார்.
அப்போது பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கிரிக்கெட் பாணியில் சட்டபேரவையில் உரையாற்றி வந்தார். தொடர்ந்து சிக்சர் அடித்து வரக்கூடிய எங்கள் அணி கேப்டன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என உரையை தொடங்கினார்.
ஆன்லைன் ரம்மிக்கு எதிராக நேற்று ஒரு சிக்சரும், டெல்டாவில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் விவகாரத்தில் மேலும் ஒரு சிக்சர் என தொடர்ந்து சிக்சர் அடித்து வரக்கூடிய எங்கள் அணி கேப்டன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என கூறினார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் உதயநிதி, என்னிடம் வரக்கூடிய கோரிக்கைகளில், வேலைவாய்ப்பு வேண்டும் என்பது தான் அதிகமாக வருகிறது. வேலை வாய்ப்புக்கு உத்திரவாதம் அளிக்கும் வகையில், முன்னணி தொழில் நிறுவனங்களுடன் இணைந்து, அரசு சார்பில் பயிற்சி திட்டங்களை வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
HCL, L&T, TCS உள்ளிட்ட நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பை வழங்கும், தொழில்நுட்ப பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது என்று சட்டப்பேரவையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். அனைத்து அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் அண்ணா பல்கலை கழக உறுப்பு கல்லூரிகளிலும், வேலைவாய்ப்பிற்கான ‘நான் முதல்வன் திறன் மற்றும் வேலை வாய்ப்பு மையம்’ நிறுவப்படும் என அறிவித்தார்.
இதற்காக ஒரு பொறியியல் கல்லூரிக்கு ரூ.70 லட்சம் வீதம் மொத்தம் ரூ.21. 70 கோடி நிதி ஒதுக்கப்படும் எனவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.