#Breaking: ஆன்லைன் சூதாட்ட தடைசட்ட மசோதா; ஆளுநர் ஒப்புதல்.!
ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
முதன்முறை நிறைவேற்றம்: தமிழ்நாட்டில் இந்த ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்கு உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில், இதனை தடை செய்யக்கோரி சட்டப்பேரவையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காக ஆளுநரிடம் அனுப்பப்பட்டிருந்தது.
இழுபறி: இந்த மசோதாவிற்கு விளக்கம் கேட்டு ஆளுநர் இதனை ஒப்புதல் வழங்காமல் திருப்பி அனுப்பியிருந்தார். இந்த நிலையில் நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த இந்த ஆன்லைன் தடை சட்டமசோதா, கடந்த மார்ச் மாதம் இரண்டாவது முறையாக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
2-வது முறை நிறைவேற்றம்: ஒரு மசோதாவை இரண்டாவது முறையாக சட்டப்பேரவையில் நிறைவேற்றினால், அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தாக வேண்டும் என்று கூறப்படுகிற நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பாக, ஆளுநர் மாளிகையில், மாணவர்களுடன் நடந்த உரையாடலின் போது ஆளுனர் பேசுகையில் மசோதா குறித்தும் பேசியிருந்தார்.
ஒப்புதல்: அதாவது ஒருமசோதா நீண்ட நாட்களாக ஒப்புதல் அளிக்கப்படமால் இருந்தால் அது நிராகரிக்கப்பட்டதாக அர்த்தம் என்று கூறியிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வந்தநிலையில், இன்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிராக தனித்தீர்மானம் கொண்டுவந்தார்.
இந்த தனித்தீர்மானம் இன்று சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில், இந்த ஆன்லைன் தடை சட்டமசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று ஒப்புதல் வழங்கியுள்ளார்.
தனித்தீர்மானம்: முன்னதாக இன்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின், மசோதாக்களுக்கு ஆளுநர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு மற்றும் குடியரசுத்தலைவரை வலியுறுத்தி, தனித்தீர்மானம் கொண்டுவரப்பட்டு, ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ள நிலையில் இந்த ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது.