இந்தியாவின் வளர்ச்சிக்கு தமிழ்நாடு உதவுகிறது; பிரதமர் மோடி பேச்சு.!
இந்தியாவின் வளர்ச்சிக்கு தமிழ்நாடு உதவுகிறது, தமிழ்நாடு வளர்ந்தால் இந்தியாவும் வளரும் என பிரதமர் மோடி பேச்சு.
பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைப்பதற்காக, இரண்டு நாள் பயணமாக இன்று தமிழகம் வந்துள்ளார். ஹைதராபாத்திலிருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடியை தமிழக ஆளுநர் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வரவேற்றனர்.
இதையடுத்து, சென்னை விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பன்னாட்டு முனையத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி, சென்னை–கோவை இடையே நாட்டின் 12-வது மற்றும் தமிழ்நாட்டின் முதல் வந்தே பாரத் ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் 125-வது ஆண்டு விழாவை நினைவுகூரும் விழாவில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார். இந்த நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி, பல்லாவரத்தில் நடைபெற்ற பல்வேறு நலத்திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டுவிழாவில் பங்கேற்றார்.
அப்போது வணக்கம் தமிழ்நாடு என தமிழில் உரையை தொடங்கிய பிரதமர் மோடி, தமிழ்நாட்டிற்கு வருவது எப்போதும் எனக்கு மகிழ்ச்சியை தரும், தேச பக்தி தேசிய உணர்வு ஆகியவற்றின் மையம் தமிழ்நாடு என புகழ்ந்து கூறியுள்ளார். இந்தியாவின் வளர்ச்சியைப் பொறுத்தவரை தமிழ்நாடும் முக்கிய பங்காற்றுகிறது.
தமிழகம் வளர்ச்சியடைந்தால் இந்தியாவும் வளரும் என்று கூறினார். மேலும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முன்னெடுக்கும் பல திட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது என்று தெரிவித்தார்.