IPL: ராஜஸ்தான் மிரட்டல் பந்துவீச்சு; டெல்லி அணி படுதோல்வி.!
ஐபிஎல் தொடரின் இன்றைய RR-DC போட்டியில், ராஜஸ்தான் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி.
RRvsDC: 16-வது ஐபிஎல் தொடரின் இன்றைய முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் கவுகாத்தியில் மோதியது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங்கில் களமிறங்கி அதிரடி காட்டியது.
அதிரடி பேட்டிங்: தொடக்க வீரர்களான பட்லர் மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் டெல்லியின் பந்துவீச்சை நாலாபுறமும் பவுண்டரிகள், சிக்ஸர்கள் என அடித்து நொறுக்கினர். ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்த நிலையில் 60 ரன்களில் ஆட்டமிழந்தார்.
சாம்சன் டக்: அதன்பிறகு களமிறங்கிய சாம்சன் முதன்முறையாக இந்த தொடரில் டக் அவுட் ஆகி வெளியேறினார். ஒருபுறம் பட்லர் அடித்து ஆடி அரைசதம் கடந்தார். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பட்லர் 79 ரன்களில் முகேஷ் குமார் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
200 ரன்கள் இலக்கு: கடைசி நேரத்தில் ஹெட்மயர்(39* ரன்கள்) அதிரடியாக விளையாடி ரன்கள் குவிக்க ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் குவித்தது. டெல்லி அணி சார்பில் முகேஷ் குமார் 2 விக்கெட்களை வீழ்த்தினார்.
டெல்லிக்கு அதிர்ச்சி: 200 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணிக்கு அதிர்ச்சியாக முதல் ஒவரிலேயே ஷா மற்றும் மனிஷ் பாண்டே இருவரும் அடுத்தடுத்து டக் அவுட் ஆகி வெளியேறினர். அதன்பிறகு இறங்கிய ரோஸோவ் 14 ரன்களில் ஆட்டமிழக்க, லலித் யாதவ், கேப்டன் வார்னருடன் சேர்ந்து பார்ட்னர்ஷிப் கொடுத்தார்.
வார்னர் அரைசதம்: அதிரடியாக விளையாடிய லலித் யாதவ் 38 ரன்களுக்கு, போல்ட் வீசிய பந்தில் போல்டானார். கேப்டன் வார்னர்(65 ரன்கள்) தனியாக போராடி அரைசதமடிக்க, மறுபுறம் விக்கெட்கள் விழுந்தவண்ணம் இருந்தது. முடிவில் டெல்லி அணி 142 ரன்கள் மட்டுமே அடிக்கமுடிந்தது, இதனால் RR அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ராஜஸ்தான் அணி சார்பில் மிரட்டலாக பந்து வீசிய ட்ரென்ட் போல்ட் மற்றும் சாஹல் தலா 3 விக்கெட்களும், அஸ்வின் 2 விக்கெட்களும் வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்டனர்.