செரீனா வில்லியம்ஸ் பிரெஞ்ச் ஓபனில் இருந்து பாதியில் விலகினார்..!

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் அமெரிக்காவின் நட்சத்திர வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் பங்கேற்றார். 36 வயது நிரம்பிய செரீனா, குழந்தை பெற்றுக்கொண்ட பிறகு பங்கேற்கும் முதல் போட்டி என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கேற்ப முதல் மூன்று சுற்றுகளில் வெற்றி பெற்றார்.
இந்நிலையில், இன்று 4–வது சுற்று ஆட்டத்தில் முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை மரிய ‌ஷரபோவாவை (ரஷியா) எதிர்கொள்வதாக இருந்தது. ஆனால், போட்டி தொடங்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னதாக, காயம் காரணமாக செரீனா போட்டியில் இருந்து விலகினார்.
சனிக்கிழமை நடைபெற்ற மூன்றாவது சுற்று ஆட்டத்தின்போதே செரீனாவுக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டது. ஞாயிற்றுக்கிழமை இரட்டையர் பிரிவில் ஓரளவு சமாளித்து ஆடினார். ஆனால், இன்று அவரால் தொடர்ந்து சர்வீஸ் போட முடியாத நிலை ஏற்பட்டதால் பாதியில் விலகி உள்ளார்.
ஷரபோவாவுடன் போட்டியிட இருந்த கடைசி நேரத்தில் அவருடைய இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இதுபற்றி செரீனா கூறுகையில், “துரதிர்ஷ்டவசமாக என்னுடைய தோள்பட்டையில் காயம் ஏற்பட்டு உள்ளது. இப்போதைய நிலையில் என்னால் விளையாடுவது என்பது மிகவும் கடினமானது. இதுபோன்று ஒருபோதும் காயம் ஏற்பட்டது கிடையாது. இதுபோன்ற வேதனையையும் அனுபவித்தது கிடையாது” என்றார்.
செரீனா விலகியதால் மரிய ஷரபோவா வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியதாக அறிவிக்கப்பட்டு உள்ளார்.  காலிறுதியில் முகுருசா அல்லது லேசியாவுடன் மோத உள்ளார் ஷரபோவா.
author avatar
Dinasuvadu desk

Leave a Comment