நைஜீரியாவில் துப்பாக்கிச்சூடு; 50 பேர் கொல்லப்பட்டனர்.!
வட மத்திய நைஜீரியாவின் கிராமத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டு தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டனர்.
வடக்கு மத்திய நைஜீரியாவில் பென்யூ மாநிலத்தில் உள்ள உமோகிடி சமூகத்தில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. அப்பகுதியிலுள்ள விவசாயிகளுக்கும், நாடோடி கால்நடை மேய்ப்பர்களுக்கும் இடையே அடிக்கடி நிலத்தகராறு தொடர்பாக மோதல்கள் ஏற்படுகின்றன.
இந்த நிலையில் ஏற்பட்ட துப்பாக்கிச்சூடு தாக்குதல்களில் இதுவரை 46 பேர் கொல்லப்பட்டு அவர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளன. இன்னும் நிறைய பேரைக் காணவில்லை என்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்றும் பென்யூ மாநில ஆளுநரின் பாதுகாப்பு ஆலோசகர் பால் ஹெம்பா தெரிவித்தார்.
தாக்குதலுக்கான நோக்கம் தெளிவாக இல்லை, ஆனால் விவசாயிகள் மற்றும் மேய்ப்பர்களுக்கு இடையிலான மோதல்களால், அவர்கள் கால்நடைகள் மற்றும் விவசாய நிலங்களை அழிப்பதாக கூறப்படுகிறது. அப்பகுதிக்கு ராணுவ வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளதால், நிலைமை சற்று அமைதியானது என்று பால் ஹெம்பா கூறினார்.
நாட்டின் வடமேற்கு மற்றும் மத்தியப் பகுதிகளில் இதுபோன்ற வன்முறைகள் பரவியுள்ளன, அங்கு பெருமளவில் ஆயுதம் ஏந்திய போராளிகள் கிராமங்களை கொள்ளையடித்து, பணத்திற்காக கடத்தல்களில் ஈடுபடுகின்றனர்.