பிரதமர் வருகை – சில மணி நேரம் ரயில் சேவை நிறுத்தம் என அறிவிப்பு!
பிரதமர் மோடியின் சென்னை வருகையையொட்டி சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சில மணி நேரம் ரயில் சேவை நிறுத்தம்.
அரசு சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காகவும், வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைப்பதற்காகவும்,பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னை வருகிறார். பிரதமர் மோடி வருகையையொட்டி சென்னையில் போலீஸ் குவிக்கப்பட்டு, 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும், நாளை பல்லாவரத்தில் இருந்து சென்னை விமான நிலையம், கிண்டி மார்க்கமாக செல்லும் அனைத்து வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. நாளை பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாளை பிற்பகல் சென்னையை வரும் பிரதமர் மோடி, மாலை 6 மணிக்கு பல்லாவரம் அல்ஸ்டாம் மைதானத்தில் அரசு விழாவில் பங்கேற்கிறார்.
இந்த நிலையில், பிரதமர் மோடியின் சென்னை வருகையையொட்டி சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சில மணி நேரம் ரயில் சேவை நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, சென்ட்ரல் ரயில் நிலையத்தில், 8,9,10,11 ஆகிய நடைமேடைகளில் விரைவு ரயில்கள் இயங்காது. அதற்கு பதிலாக வேறு நடைமேடைகளில் இயக்கபட உள்ளது. பின்னர் 10 மற்றும் 11 வது நடைமேடைகளில் பிரதமர் நரேந்திரமோடி வந்தேபாரத் ரயிலை கொடி அசைத்து துவக்கிவைக்கிறார். பாதுகாப்பு நடவடிக்கையாக சில மணி நேரம் ரயில் சேவையை நிறுத்தப்பட உள்ளது.