டி.என்.பி.எஸ்.சி: குரூப் 4 தேர்வில் மேலும் ஒரு சர்ச்சை.!
குரூப் 4 தட்டச்சர் தேர்வில் சங்கரன்கோவில் பகுதியில் இருந்து 450 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதால் புதிய சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 4 தேர்வுகளின் முடிவுகள் சமீபத்தில் வெளியானது. தமிழ்நாடு பணியாளர்கள் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வு, கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடத்தப்பட்டது. சுமார் 10,000 காலிப் பணியிடங்களுக்காக 18 லட்சம் பேர் இந்த தேர்வினை எழுதியுள்ளனர். இதற்கான தேர்வு முடிவு இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று அறிவித்திருந்த நிலையில் மார்ச் 24 அன்று முடிவுகள் வெளியிடப்பட்டது.
தற்பொழுது, குரூப் 4 தேர்வில் ஒரே தேர்வு மையத்தைச் சேர்ந்த, சங்கரன்கோவில் பகுதியில் இருந்து தட்டச்சு பணியிடங்களுக்கு 450 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. 2,500 ஸ்டெனோ டைப்பிஸ்ட் காலியிடங்களுக்கு தேர்ச்சி பெற்ற சுமார் 600 பேர் தென்காசி மாவட்டத்தை சேர்ந்தோர் என்றும், அதில் சங்கரன்கோவிலில் மட்டும் 450 பேர் தேர்ச்சி பெற்றது எப்படி எனவும் கேள்வி எழுந்துள்ளது.
சான்றிதழ் சரிபார்ப்புக்கு தகுதி உள்ளவர்களின் பட்டியலை நேற்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிடபட்டது. அந்த பட்டியலில் தான் இந்த சர்ச்சை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்நிலையில் இதில், முறைகேடுகள் நடைபெற்றிருக்க வாய்ப்பு உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இதற்கு முன்னதாக, தென்காசியை சேர்ந்த ஆகாஷ் பிரண்ட்ஸ் என்கிற என்கின்ற தனியார் ஐஏஎஸ் அகாடமியில் (TAF) இருந்து மட்டும் 2000 பேர் தேர்வாகியுள்ளது சர்ச்சயை ஏற்படுத்தியது. மேலும் குரூப்-4 தேர்வில் முதல் 11 இடங்களில் ஆறு இடங்களை ஒரே தேர்வு மையத்தில் படித்த மாணவர்கள் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.