வெல்கம் டு கபடி ஸ்டைல்!என் பேரு தவான் மட்டும் இல்ல,வேற ஒரு பேரும் இருக்கு!ஷிகார் தவான் ஒபன் டாக்
இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஷிகார் தவாண்,சதம் அடித்தல், கேட்ச் பிடித்து விக்கெட் வீழ்த்துதல் ஆகிய கொண்டாட்டத்தின் போது கபடி ஸ்டைலில் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதையே விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
முறுக்கு மீசை ஷிகார் தவாணின் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். ஆனால், சமீபகாலமாக அவர் சதம் அடித்தாலும், கேட்ச் பிடித்தாலும் மீசையை முறுக்கும் ஸ்டைலை அதிகமாகக் கடைபிடிக்காமல், கபடிப் போட்டியில் தொடையைத் தட்டி வீரத்தை காட்டும் ஸ்டைலை அதிகமாக பின்பற்றிவருகிறார் என்பது கவனிக்கத்தக்கது.
இது குறித்து ‘பிரேக்பாஸ்ட் வித் சாம்பியன்ஸ்’ எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கவுரவ் கபூரிடம் தனது கபடி ஸ்டைல் கொண்டாட்டம் குறித்தும், தன்னை கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் தவாணுக்கு பதிலாக வேறுஒரு பெயர் வைத்து கூப்பிடும் ரகசியத்தையும் அவர் வெளிப்படுத்தினார்
ஷிகார் தவாண் கூறியதாவது:
ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்காகச் சென்று இருந்தோம். அப்போது வாட்ஸன் விக்கெட் அடித்த பந்தை பவுண்டரி லைனில் இருந்த நான் கேட்ச் பிடித்து ஆட்டமிழக்கச் செய்தேன். அப்போதுதான் தொடையைத் தட்டி கபடி ஸ்டைலில் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினேன். அப்போது இருந்து எனக்கு தொடையைத் தட்டி மகிழ்ச்சியைத் தெரிவிப்பது பழக்கமாகிவிட்டது. பொதுவாக எனக்குக் கபடி போட்டியைப் பார்க்க மிகவும் பிடிக்கும்.
என்னை உற்சாகமாக வைத்திருக்கக்கூடிய போட்டி கபடியாகும். என் முழு மனநிறைவுடன் கபடி போட்டியைப் பார்ப்பேன், அதேபோன்று ஸ்டைலில் எனது மகிழ்ச்சியைக் கொண்டாட விரும்புகிறேன். அதனால்,தான் நான் பவுண்டரி லைனில் நிற்கும்போது கேட்ச் பிடித்தவுடன் ரசிகர்கள், கபடி ஸ்டைல் கொண்டாட்டத்தைக் காண ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.
என்னை கிரிக்கெட் நண்பர்கள் வட்டாரத்தில் தவாண் என்று அழைத்தாலும், நெருங்கிய வட்டாரத்தில் ‘கப்பார் சிங்’ என்றுதான் அழைப்பார்கள். ‘ஷோலே’ படத்தில் வரும் வில்லன் பெயர் கப்பார் சிங், அந்தப் பெயரில்தான் இன்றும் அழைத்துவருகிறார்கள்.
ரஞ்சி போட்டியின் போது, எனக்கு ‘கப்பார்’ என்ற பெயர் கிடைத்தது. விஜய் தையா பையா எனக்கு இந்தப் பெயரை சூட்டினார். கிரிக்கெட்டியில் சில்லி பாயின்ட்டில்தான் நான் எப்போதும் பீல்டிங்கில் இருப்பேன். அப்போது, வீரர்களை உற்சாகப்படுத்த அவ்வப்போது சினிமா வசனங்களைப் பல குரல்களில் பேசி அவர்களைச் சிரிக்கவும் வைப்பேன்.
ஒருமுறை ரஞ்சிப்போட்டியில் எதிரணி வீரர்கள் நீண்டநேரம் பார்ட்னர்ஷிப் அமைத்து விக்கெட்டில் நிலைத்து விட்டனர். அவர்களை எங்களால் பிரிக்கவே முடியவில்லை. இதனால், அணியில் உள்ள பந்துவீச்சாளர்கள், பீல்டர்கள் அனைவரும் உற்சாகம் இழந்து, நம்பிக்கை இழந்து அமைதியாகிவிட்டார்கள்.
அணியின் தார்மீக நம்பிக்கையையும், உற்சாகத்தையும் தட்டி எழுப்பும் பங்கு எனக்கும் இருக்கிறது என்பதால், பந்துவீச்சாளர் பந்துவீச ஓடிவந்தபோது, நான் ‘ பகுத் யார்னா லக்தா ஹை’(உன்னைப் பார்க்கும்போது என்னோட நெருங்கிய நண்பர் போல இருக்குப்பா) என்ற வசனத்தைப் பேசியதும், அனைத்து வீரர்களும் சிரித்து மகிழ்ந்தனர். ‘ஷோலே’ திரைப்படத்தில் வில்லன் ‘கப்பார் சிங்’காக நடித்த அம்ஜத்கான் பேசிய பிரபலமான வசனம் அதுவாகும்.
அதுமுதல், நான் களத்திற்கு வெளியே இருந்தாலும், பேட்டிங் செய்தாலும் நான்அவ்வப்போது இந்த வசனத்தைப் பேசி வீரர்களை உற்சாகப்படுத்துவேன். இதைக்கேட்டுச் சிரிக்காத வீரர்களே இருக்க முடியாது. இதனால், எனது பெயரை ‘ஷோலே’ படத்தின் வில்லன் ‘கப்பார் சிங்’ பெயரே வீரர்கள் வைத்து அழைக்கத் தொடங்கிவிட்டார்கள்.இவ்வாறு ஷிகார் தவாண் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.