கலாஷேத்ரா விவகாரம் : ஹரி பத்மன் மிகவும் சிறந்த ஆசிரியர் – பிக்பாஸ் அபிராமி
கலாஷேத்ரா பாலியல் தொல்லை விவகாரத்தில் அரசியல் நடக்கிறது என நடிகை அபிராமி குற்றசாட்டு.
சென்னையில் செயல்பட்டு வரும் கலாஷேத்ரா பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் நடன பேராசிரியர் ஹரி பத்மன் , மாணவிகளிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தது.
இதனை அடுத்து தனிப்படை அமைத்து, ஹரி பத்மனை ஹைதிராபாத்தில் இருந்து சென்னை வந்த அவரை அவரது நண்பர் வீட்டில் வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்த பாலியல் குற்றசாட்டுகள் தொடர்பாக விரிவான விசாரணை நடத்துவதற்கு கலாஷேத்ரா அறக்கட்டளை விசாரணை குழுவை அமைத்துள்ளது. இதற்கு முன்னாள் தமிழக டிஜிபி லத்திகா சரண் தலைமை தாங்கவுள்ளார்.
நடிகை அபிராமி பேட்டி
இந்த நிலையில், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்த பின், கலாஷேத்ரா முன்னாள் மாணவியும், நடிகையுமான அபிராமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், பொதுவாக எந்தவொரு வன்கொடுமைகள் நடந்தாலும் யாரும் சொல்லாமலே குரல் கொடுப்பேன்.
நானும் கலாஷேத்திரா கல்லூரியில் படித்தவள் தான். அந்த கல்லூரியின் முன்னாள் மாணவி நான். எனக்கு இந்த விவகாரத்தில் பேச விருப்பமில்லை. கலாஷேத்ரா பாலியல் தொல்லை விவகாரத்தில் அரசியல் நடக்கிறது. கலாஷேத்ரா பற்றி சமூக வலைதளத்தில் பரவும் தகவல்களால் வேதனையடைந்தேன்.
கலாஷேத்ரா ஆசிரியர் ஒருவர் என்னை தொடர்பு கொண்டு ஹரிபத்மனுக்கு எதிராக பேசுமாறு கூறினார். பேராசிரியர் ஹரி பத்மன் எங்களுக்கு வகுப்பெடுத்த வரை எந்தவித தொல்லையும் அளிக்கவில்லை. இந்த விவகாரத்தில் கலாஷேத்ரா மாணவிகள் பலி ஆடுகளாக ஆக்கப்படுகின்றனர். ஹரி பத்மன் மிகவும் சிறந்த ஆசிரியர் என தெரிவித்துள்ளார்.