வதந்தி பரப்பிய பாஜக நிர்வாகி மன்னிப்பு கேட்க உச்சநீதிமன்றம் உத்தரவு!
புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பிய பாஜக நிர்வாகி பிரசாந்த் உமராவ் மன்னிப்பு கேட்க உத்தரவு.
தமிழ்நாட்டில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பிய பாஜக நிர்வாகி பிரசாந்த் உமராவ் வரும் ஏப்ரல் 10ம் தேதிக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தன் மீதான வழக்குகளை ஒன்றாக விசாரிக்க கோரி பிரசாந்த் உமராவ் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதன்படி, புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றி போலி செய்தி வெளியிட்ட விவகாரம் தொடர்பாக பிரஷாந்த் உம்ராவ் மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. நீதிபதிகள் பிஆர் கவாய் மற்றும் பங்கஜ் மிட்டல் உள்ளிட்டோர் தலைமையிலான அமர்வு இவ்வழக்கை விசாரித்தது.
மனுதாரர் பாஜக நிர்வாகி பிரசாந்த் உமராவ் சார்பில் மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லூத்ரா ஆஜரானார். பல்வேறு செய்தி நிறுவனங்களில் வெளியாகிய செய்திதான் மீண்டும் ட்விட்டரில் Retweet செய்யப்பட்டது, ஆனால் உம்ராவ் மீது பல்வேறு வழக்குகளை மாநில அரசு பதிவு செய்துள்ளது என்றும் அவர் செய்தது தவறு என தெரிந்த பிறகு அந்த ட்வீட்டை டெலிட் செய்து விட்டார் எனவும் வாதிட்டார்.
இந்த விவகாரத்தில் உம்ராவ் மீது பல்வேறு எப்ஃஐஆர்கள் பதியப்பட்டு வருகிறது. உம்ராவ் நேரடியாக சென்றால் அவருக்கு எதிராக உள்ள மற்ற எப்ஃஐஆர்களில் தமிழ்நாடு காவல்துறை அவரை கைது செய்யும் என்றும் வாதம் முன்வைத்தார். இதன்பின், பாஜக நிர்வாகியான பிரஷாந்த் உம்ராவ்-ன் ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தி, ஏப்ரல் 10ம் தேதி காலை 10 மணிக்கு மனுதாரர் சம்மந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஆஜராகி மன்னிப்பு கேட்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.