கர்நாடக தேர்தலில் பாஜகவுக்கு பரப்புரை மட்டுமே செய்வேன்.. போட்டியில்லை – நடிகர் கிச்சா சுதீப் பேட்டி
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுக்கு நான் தேர்தல் பிரசாரம் மட்டுமே செய்வேன் என கன்னட நடிகர் கிச்சா சுதீப் பேட்டி.
கர்நாடகாவில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அம்மாநிலத்தின் சட்டப்பேரவையின் பதவிக்காலம் மே 24-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இந்த சமயத்தில் 224 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் மே 10-ஆம் ஒரே கட்டமாக நடைபெறும் என்றும் இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 13-ஆம் தேதி எனவும் எனவும் தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் முன்னிட்டு ஆளும் கட்சியாக இருக்கும் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தேர்தல் களத்தில் குதித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அம்மாநில சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் என மும்முனை போட்டி நிலவுகிறது.
இந்த நிலையில், பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் கன்னட நடிகர் கிச்சா சுதீப். இதுதொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், கர்நாடக மாநில முதல்வரான பசவராஜ் பொம்மை என் வாழ்வில் மிக முக்கிய நபர். என் வளர்ச்சிக்கு ஆரம்ப காலத்தில் இருந்து உறுதுணையாக இருந்தவர். வரும் சட்டமன்ற தேர்தலில் முதல்வர் பசவராஜ் பொம்மை மற்றும் அவர் ஆதரவு கோரும் பாஜக வேட்பாளருக்களுக்கு நான் பரப்புரை செய்வேன் என அதிரடியாக கூறியுள்ளார். மேலும், கர்நாடக சட்டசபை தேர்தலில் பரப்புரை மட்டுமே செய்வேன், போட்டியிடவில்லை எனவும் தெரிவித்தார்.