டெல்லி கலால் கொள்கை வழக்கு..! மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் ஏப்.17 வரை நீட்டிப்பு..!
டெல்லி கலால் கொள்கை வழக்கில் மணிஷ் சிசோடியாவின் நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
டெல்லி கலால் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியாவின் நீதிமன்றக் காவலை ஏப்ரல் 17ஆம் தேதி வரை நீடித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி மதுபான கொள்கை :
டெல்லி அரசின் புதிய மதுபான கொள்கை சம்பந்தமாக அரசுக்கு பலகோடி ரூபாய் நிதி இழப்பீடு ஏற்பட்டதாகவும், அதன் மூலம் சட்டவிரோத பணபரிவார்த்தனை நடைபெற்றதாகவும் கூறி மணீஷ் சிசோடியாவை பிப்.26ஆம் தேதி 8 மணி நேர விசாரணைக்கு பின்னர் சிபிஐ கைது செய்தது.
மணீஷ் சிசோடியா நீதிமன்ற காவல் :
இந்த கைது நடவடிக்கைக்கு பின்னர், முதலில் 5 காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு டெல்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்பின் மேலும் 2 நாள் காவலில் விசாரிக்கவும் அனுமதி வழங்கப்பட்டது. இந்த சிபிஐ காவல் முடிந்து மீண்டும் ஆஜர்படுத்தப்பட்ட மணீஷ் சிசோடியாவை மார்ச் 20ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் சிசோடியாவின் நீதிமன்ற காவலை ஏப்ரல் 3-ஆம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீதிமன்ற காவல் நீட்டிப்பு :
தற்போது, சிசோடியாவின் நீதிமன்ற காவல் நிறைவடைந்த நிலையில் இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். சிபிஐ தரப்பில், விசாரணை முக்கிய கட்டத்தில் இருப்பதால் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவலை மேலும் 14 நாட்கள் நீடிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவலை ஏப்ரல் 17ஆம் தேதி வரை நீட்டித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.