நேட்டோ அமைப்பு – பின்லாந்துக்கு துருக்கி பாராளுமன்றம் ஒப்புதல்.!
நேட்டோவில் இணைவதற்கான பின்லாந்தின் விண்ணப்பத்திற்கு துருக்கி பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
துருக்கி பாராளுமன்றம், வடக்கு அட்லாண்டிக் உடன்படிக்கை அமைப்பில் (நேட்டோ) இணைவதற்கான பின்லாந்தின் விண்ணப்பத்தை அங்கீகரிப்பதற்கு ஒருமனதாக வாக்களித்துள்ளது. இதனால் நேட்டோவின் 31வது உறுப்பினராக பின்லாந்து மாறியுள்ளது.
துருக்கி நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பைத் தொடர்ந்து, பின்லாந்து ஜனாதிபதி சவுலி நினிஸ்டோ, “தனது நாடு நேட்டோவில் சேரத் தயாராக உள்ளது என்று கூறினார். நேட்டோவின் 30 உறுப்பினர்களும் இப்போது பின்லாந்தின் அங்கத்துவத்தை அங்கீகரித்து உள்ளதாகவும், அவர்களின் நம்பிக்கைக்கும் ஆதரவிற்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன்” என்றும் அவர் மேலும் கூறினார்.
கடந்த 2022 இல் பின்லாந்து மற்றும் ஸ்வீடன் நாடுகள் நேட்டோவில் சேர விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தன. ஆனால் பயங்கரவாதிகளை ஆதரிப்பதாக புகார் கூறி நேட்டோவில் சேருவதற்கான பின்லாந்தின் முயற்சியை துருக்கி தாமதப்படுத்தியது. மேலும், நேட்டோவில் சேர விண்ணப்பித்த ஸ்வீடன் இதே போன்ற புகார்கள் காரணமாக இன்னும் துருக்கியால் தடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.