#BoycottRohiniCinemas: தீண்டாமை கொடுமை விவகாரம்.! ட்விட்டரில் கொந்தளித்த நெட்டிசன்கள்…
ரோகிணி திரையரங்கில் டிக்கெட் வைத்திருந்தும் ‘பத்து தல’ படத்தை பார்க்க வந்த நரிக்குறவர்களுக்கு அனுமதிக்க மறுக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கில் சிம்பு நடிப்பில் இன்று வெளியான ‘பத்து தல’ படத்தின் முதல் காட்சிக்கு, நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த இருவர் டிக்கெட் எடுத்து திரையரங்கிற்குள் வந்துள்ளனர். ஆனால், டிக்கெட் இருந்தும் இருவரை ரோகிணி திரையரங்க ஊழியர்கள் உள்ளே விட மறுத்துள்ளனர்.
பிறகு, அவர்களின் அருகில் இருந்த ரசிகர்கள் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரும் இது மிகவும் தவறான செயல், அவர்களும் மனிதர்கள் தான் என கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.
தற்போது, சமூக வலைதளமான ட்விட்டர் பக்கத்தில் நெட்டிசன்கள் அனைவரும் அந்த நரிக்குறவர்களுக்கு ஆதரவு தெரிவித்து, #BoycottRohiniCinemas என்ற கேஸ்டெக் ட்ரெண்ட் செய்ய தொடங்கினர். இந்திய அளவில் இந்த கேஸ்டெக் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.
ஆனால், இந்த வீடியோ மற்றும் இவ்விவகாரம் நிர்வாகத்தின் கவனத்திற்கு வந்ததும், “அந்த நரிக்குறவர்களுக்கு படம் தொடங்குவதற்கு முன்பே சரியான நேரத்திற்கு உள்ளே அனுமதிக்கப்பட்டதாக” சென்னை ரோஹினி திரையரங்க உரிமையாளர் நிகிலேஷ் சூர்யா விளக்கம் கொடுத்துள்ளார்.
— Rohini SilverScreens (@RohiniSilverScr) March 30, 2023