ராகுல் பதவிநீக்கம்; திமுக, காங்கிரஸ் எம்.பி க்கள் கருப்பு சட்டையுடன் நாடாளுமன்றம் வருகை.!
நாடாளுமன்றத்திற்கு திமுக, காங்கிரஸ் எம்.பி க்கள் இன்று கருப்பு ஆடை அணிந்து வருகை தந்துள்ளனர்.
2019 குஜராத் பரப்புரையில் மோடி பெயருக்கு அவதூறு கருத்து தெரிவித்ததாக குற்றம் சாட்டப்பட்ட ராகுல் காந்திக்கு, நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்து 2 ஆண்டுகள் சிறை தண்டனை அறிவித்து உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து ராகுல் காந்தி எம்.பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு வகையான போராட்டம் நடத்திவரும் வகையில், ராகுல் காந்தி பதவிநீக்கம் மற்றும் அதானி விவகாரம் ஆகியவற்றிற்கு, எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் இன்று காங்கிரஸ் எம்.பி க்கள் கருப்பு உடை அணிந்து பங்கேற்க முடிவுசெய்துள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராகுல் காந்தியின் தகுதிநீக்கத்திற்கு, தங்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று நாடாளுமன்றத்திற்கு கருப்பு சட்டை அணிந்து வருகை தந்துள்ளனர்.
திமுக சார்பில் திருச்சி சிவா மற்றும் தயாநிதி மாறன் ஆகியோர் கருப்பு சட்டையுடன் நாடாளுமன்றத்திற்கு வந்துள்ளனர். அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து எதிர்க்கட்சிகள் நடத்தும் ஆலோசனைக்கூட்டத்திலும் காங்கிரஸ் உள்ளிட்ட அதன் கூட்டணி கட்சிகளும் இன்று கருப்பு சட்டை அணிந்து வருகை தந்துள்ளனர்.