சாவர்க்கரை அவமதித்தால் கூட்டணியில் விரிசல்; ராகுலுக்கு, உத்தவ் தாக்கரே எச்சரிக்கை.!
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சாவர்க்கரை அவமதிப்பதை பொறுத்துக் கொள்ளமாட்டோம் என உத்தவ் தாக்கரே எச்சரிக்கை.
2019 குஜராத் பரப்புரையில் மோடி பெயருக்கு அவதூறு கருத்து தெரிவித்ததாக குற்றம் சாட்டப்பட்ட ராகுல் காந்திக்கு, நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்து 2 ஆண்டுகள் சிறை தண்டனை அறிவித்து உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து எம்.பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டு அதற்கு விளக்கமளித்த ராகுல் காந்தி, மன்னிப்பு கேட்க தான் சாவர்க்கர் அல்ல என்று கூறியிருந்தார்.
இந்தநிலையில் ராகுலின் இந்த கருத்துக்கு, சிவசேனா (யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரே, சாவர்க்கரை இழிவுபடுத்துவது எதிர்க்கட்சி கூட்டணியில் விரிசல்களை உருவாக்கும் என்று எச்சரித்துள்ளார். இந்துத்துவா சித்தாந்தவாதியான வி டி சாவர்க்கரை, தனது ரோல் மாடலாக கருதுவதாகவும், ராகுல் காந்தி அவரை அவமதிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் தாக்கரே கூறினார்.
சாவர்க்கர் 14 ஆண்டுகளாக அந்தமான் செல்லுலார் சிறையில் கற்பனை செய்ய முடியாத சித்திரவதைகளை அனுபவித்தார், இது ஒரு வகையான தியாகம். வீர் சாவர்க்கர் எங்கள் கடவுள், அவருக்கு எந்த அவமரியாதையும் இருந்தால் பொறுத்துக் கொள்ள முடியாது. ராகுல் காந்தி தொடர்ந்து சாவர்க்கரை இழிவுபடுத்தினால் எதிர்க்கட்சி கூட்டணியில் விரிசல் ஏற்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உத்தவ் தாக்கரே வின் சிவசேனா, காங்கிரஸ் மற்றும் என்சிபி கூட்டணியில் உள்ளது. இருப்பினும், இந்தியாவின் ஜனநாயகத்தை காப்பாற்ற ஒன்றிணைய வேண்டும் என்பதை அவர் மேலும் வலியுறுத்தினார்.