தூத்துக்குடியில் மாணவி ஸ்னோலின் இறுதி நிகழ்ச்சி ஏராளமானோர் பங்கேற்பு..!
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் இறந்த மாணவி ஸ்னோலின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப் பட்டு நடந்த இறுதி நிகழ்ச்சிகளில் ஏராளமானோர் பங்கேற்றனர். ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.
தூத்துக்குடியில் கடந்த 22 ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதில் தூத்துக்குடி லயன்ஸ்டவுன் மினிசகாயபுரத்தைச் சேர்ந்த மாணவி ஸ்னோலினும் துப் பாக்கிச்சூட்டில் உயிரிழந்தார். அவரது உடல் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. ஸ்டெர்லைட் ஆலையை உடனே மூடினால் தான் உடலை வாங்குவோம் என ஸ்னோலின் பெற்றோர் தெரிவித்தனர். மாவட்ட ஆட்சியர் மற்றும் உயரதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு உடலை பெற்றுக்கொள்ள சம்மதம் தெரிவித்தனர்.
பின்னர் ஞாயிறன்று காலை சுமார்10 மணியளவில் அரசு மருத்துவமனையிலிருந்து அவரது வீட்டிற்கு ஸ்னோலினின் உடல் எடுத்துச் செல்லப்பட்டது. பின்பு லயன்ஸ்டவுன் சகாய அன்னை திருத்தலத்தில் ஜார்ஜ் ரோட்டிலுள்ள கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது அவரது உறவினர்கள், நண்பர்கள், லயன்ஸ்டவுன் பகுதி மக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இறுதி நிகழ்ச்சியை ஒட்டி பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர்.