ராகுல் காந்தியின் பதவிப்பறிப்பு – முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
ராகுல் காந்தி மீதான நடவடிக்கையைத் திரும்பப் பெற வேண்டும் என முதல்வர் அறிக்கை
2019 பொதுத்தேர்தல் பரப்புரையில், எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பெயர் இருக்கிறது என மோடி குறித்து அவதூறாக பேசிய வழக்கில், ராகுல் காந்தியை சூரத் நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்துள்ளதோடு, 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்து இருந்தது.
2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ராகுல் காந்தியை எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து மக்களவை செயலகம் அறிவித்துள்ளது. இதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
முதல்வர் கண்டனம்
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராகுல் காந்தி மீதான நடவடிக்கையைத் திரும்பப் பெற வேண்டும்; அவர் மீதான நடவடிக்கை என்பது முற்போக்கு ஜனநாயக சக்திகள் மீதான தாக்குதல். எம்பிக்கு கூட கருத்து சொல்லும் ஜனநாயக உரிமை இல்லை என மிரட்டும் துணியில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ராகுல் காந்தியை பார்த்து பாஜக தலைமை எந்த அளவுக்கு பயப்படுகிறது என்பது இதன் மூலம் தெரிகிறது. ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணம் மக்களிடையே ஏற்படுத்தியுள்ள தாக்கமே இதற்கு காரணம் தகுதி நீக்க நடவடிக்கை மூலம் ஜனநாயகம் என்ற சொல்லை உச்சரிக்கும் தகுதியை பாஜக இழந்துவிட்டது என தெரிவித்துள்ளார்.