மீண்டும் பட்ஜெட்டை சமர்ப்பிக்க டெல்லி அரசிடம், மத்திய உள்துறை அமைச்சகம் கோரிக்கை.!
டெல்லி பட்ஜெட் அறிக்கையை மீண்டும் சமர்ப்பிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் கெஜ்ரிவால் அரசிடம் கேட்டுள்ளது.
மத்திய அரசுக்கும், டெல்லியில் உள்ள கெஜ்ரிவால் அரசுக்கும் இடையே பல்வேறு பிரச்னைகளில் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், 2023-24 ஆம் ஆண்டுக்கான அரசின் பட்ஜெட்டை உள்துறை அமைச்சகம் முடக்கியதாக ஆம் ஆத்மி கட்சி திங்கள்கிழமை குற்றம் சாட்டியது. இன்று டெல்லி சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதாக இருந்தது.
இந்த நிலையில் குற்றச்சாட்டுகளை நிராகரித்த உள்துறை அமைச்சகம், டெல்லி அரசின் பட்ஜெட் ஒதுக்கீட்டில் உள்கட்டமைப்பு துறையை விட விளம்பரத்தில் கவனம் செலுத்தியதால் டெல்லி அரசாங்கத்திடம் விளக்கம் கேட்டுள்ளது. இதற்கு பதிலளித்த டெல்லி அரசு, இந்த ஆண்டு பட்ஜெட்டில் விளம்பரத்திற்கான ஒதுக்கீடு அதிகரிக்கப்படவில்லை என்று கூறியது.
டெல்லியின் மொத்த பட்ஜெட் ரூ.78,800 கோடி. இதில் ரூ.22,000 கோடி உள்கட்டமைப்புக்கு, ரூ.550 கோடி மட்டுமே விளம்பரத்துக்கு செலவிடப்படும். கடந்த ஆண்டும் விளம்பரத்துக்கான பட்ஜெட் இதேதான் என விளக்கம் கூறியிருந்தது.
இந்த நிலையில் டெல்லி கவர்னர் விகே சக்சேனா தெரிவித்திருந்த மாறுதல்களை நிறைவேற்றி மீண்டும் பட்ஜெட் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம், டெல்லி அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது. டெல்லியின் பட்ஜெட் உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு சென்று, ஒப்புதல் பெறப்பட்டால் மட்டுமே அது சட்டசபையில் தாக்கல் செய்யப்படும்.