வாட்ஸ் ஆப்பில் வதந்திகளை பரப்பியவர் கைது]..!
வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் குழந்தைகளைக் கடத்த வடமாநிலத்தவர் நானூற்றுக்கு மேற்பட்டோர் வந்துள்ளதாகச் சமூக வலைத்தளத்தில் வதந்தி பரப்பியவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பத்தூர் அருகே ஆதியூர் ராவுத்தம்பட்டியைச் சேர்ந்த யாதவ் மூர்த்தி கட்டுமானத் தொழிலாளி ஆவார். இவர் திருப்பத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குழந்தைகளைக் கடத்துவதற்கு வடமாநிலங்களில் இருந்து நானூற்றுக்கும் மேற்பட்டோர் வந்துள்ளதாகப் பேசி அதைச் சமூக வலைத்தளங்களான பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் ஆப் ஆகியவற்றில் பரப்பி உள்ளார்.
இவர் பேசிய வீடியோ வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, சேலம் ஆகிய மாவட்டங்களில் லட்சக்கணக்கானோருக்குப் பரவியது.
குழந்தைகள் கடத்த வந்ததாகப் பலர் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்ததும், காயமடைந்ததும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் வதந்தி பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் காவல்துறை எச்சரித்திருந்தது.
இந்நிலையில் வாட்ஸ் ஆப்பில் பரவிய வீடியோ குறித்துக் காவல்துறையினர் ஆய்வு செய்து வந்தனர். இதையடுத்துத் திருப்பத்தூர் காவல்துறையினர் ராவுத்தம்பட்டியில் யாதவ் மூர்த்தியைக் கைது செய்தனர்.