TNbudget2023-24 Live : குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000..! நிதியமைச்சர் அதிரடி அறிவிப்பு!
தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படும் 2023-24க்கான பட்ஜெட் உரையின் முக்கிய நிகழ்வுகளை காண்போம்.
- முதியோர் ஓய்வூதிய திட்டத்திற்கு ரூ.5,346 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் 35.8 லட்சம் பயனாளிகள் ஓய்வூதியம் பெறுவார்கள்.
- பழனி, திருத்தணி, சமயபுரம் ஆகிய திருக்கோயில்களின் பெருந்திட்டப் பணிகள் ரூ.485 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
- சமையல் எரிவாயு மானியம் வழங்கும் திட்டம் வரும் செப்டம்பர் 15 முதல் செயல்படுத்தப்படும்.
- வரும் செப்டம்பர் 15ம் தேதியில் இருந்து மகளிர் உரிமைத்தொகை மூலம் தகுதியான குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வரும் நிதியாண்டும் முதல் வழங்கப்படும். இத்திட்டத்திற்கு ரூ.7000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- நிலம் வாங்குவோரின் சுமையை குறைக்க பதிவுக்கட்டணத்தை 4% இருந்து 2% ஆக குறைக்க அரசு முடிவு செய்துள்ளது.
- ரூ.4,236 கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.
- அரசுப்பணியாளர்களுக்கு வீடு கட்டுவதற்கான முன் பணம் ரூ.40 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
- சென்னை, தாம்பரம், ஆவடி, கோவை, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய மாநகராட்சிகளின் முக்கிய பொது இடங்களில் இலவச இணைய சேவைகள் (WiFi) வழங்கப்படும்.
- அனைத்து அரசுத்துறைகளையும் ஒருங்கிணைத்து அனைத்து ஊராட்சி, நகர்ப்புற பகுதிகளில், நலத்திட்ட உதவிகளை பெற முகாம்கள் அமைக்கப்படும்.
- ராணிப்பேட்டை மற்றும் கள்ளக்குறிச்சியில் தோல் (லெதர்) அல்லாத காலணிகளை தயாரிக்கும் மேலும் இரண்டு தொழிற்சாலைகள் அமைக்கப்படவுள்ளது, இதனால் 32,000 பெண்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படுகிறது.
- 2023-24 நிதியாண்டில் தொழில் துறைக்கு ரூ.3,200 கோடிக்கு மேல் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- ஒகேனக்கல் மற்றும் பூம்புகார் சுற்றுலா வளர்ச்சிக்கு ரூ.55 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- நடப்பு நிதியாண்டில் 574 கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டது. வரும் நிதியாண்டில் 400 கோயில்களில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு, குடமுழுக்கு நடத்தப்படும் என்று நிதியமைச்சர் தெரிவித்தார்.
- அதிக சுற்றுலா பயணிகள் வருவதில் நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. அரசு உருவாக்கியுள்ள சுற்றுலா கொள்கை விரைவில் வெளியிடப்படும்.
- ஈரோடு, நெல்லை, செங்கல்பட்டில் தலா 1 லட்சம் சதுரடி பரப்பளவில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும்.
- 2030ஆம் ஆண்டுக்குள் 14,500 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் வகையில் மெகா மின் திட்டத்தை உருவாக்க ரூ.77,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- விருதுநகர், வேலூர், கள்ளக்குறிச்சி, கோயம்புத்தூர் ஆகிய புதிய சிப்காட் தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும். இதனால் 22,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
- தமிழ்நாடு 2 ஆண்டுகளில் அதிகளவிலான தொழில் முதலீடுகளை ஈர்த்து வருகிறது. உலக முதலீட்டாளர் மாநாடு அடுத்த ஆண்டு ஜனவரியில் நடத்தப்படும். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்த ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு (TANGEDCO) மானியமாக ரூ 14,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- இந்தியாவில் கடந்த ஆண்டு விற்பனை செய்யப்பட்ட இருசக்கர மின் வாகனங்களில் 46% வாகனங்கள் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டவை என்பதை பெருமிதத்துடன் நிதியமைச்சர் தெரிவித்தார்.
- விருதுநகர் மாவட்டத்தில் ரூ.1,800 கோடி மதிப்பீட்டில் 1,150 ஏக்கர் பரப்பளவில் ஜவுளி பூங்கா ஒன்றிய, மாநில அரசுகள் நிதி பங்களிப்புடன் அமைக்கப்படும்.
- 1,000 புதிய பேருந்துகள் கொள்முதல் மற்றும் மேலும் 500 பேருந்துகளை புதுப்பிக்க ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- வழபழனி, திருவான்மியூர், வியாசர்பாடியில் உள்ள பேருந்து பணிமனைகள் ரூ.1600 கோடி செலவில் மேம்படுத்தப்படும்!.
- ஒவ்வொரு ஆண்டும், 1000 சிவில் சர்வீஸ் ஆர்வலர்கள் தேர்வு செய்யப்பட்டு, முதல்நிலைத் தேர்வுகளுக்குத் தயாராக 10 மாதங்களுக்கு மாதாந்திர உதவியாக ரூ.7,500 வழங்கப்படும். முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு 25,000 ரூபாய் வழங்கப்படும். இதற்கு ரூ.10 கோடியை அரசு ஒதுக்கியுள்ளது.
- சிவில் சர்வீஸ் விண்ணப்பதாரர்கள் மெயின் தேர்வுக்கு தயார் செய்ய மாதாந்திர உதவித்தொகையாக ரூ.7,000 வழங்கப்படும்.
- கோயம்புத்தூரில் மெட்ரோ ரயில் திட்டம் ரூ.9000 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். மதுரையில் ரூ8500 கோடி செலவில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்.
- சென்னை மாநகராட்சியில் பொதுக் கழிப்பறையின் வெற்றியின் அடிப்படையில் பொதுக் கழிப்பறைகளைப் பராமரிக்கும் திட்டம் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும். சென்னை மாநகராட்சி இரண்டு மண்டலங்களில் ரூ.430 கோடி செலவில் கழிப்பறை பராமரிப்பை தனியாரிடம் ஒப்படைத்துள்ளது
- பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் ரயில்வே போக்குவரத்து பங்களிப்பு குறைவாக உள்ளதாகவும் இதனை சரி செய்ய, ரயில்வே அமைச்சகத்துடன் இணைந்து புதிய வழித்தடங்களை உருவாக்க புதிய அரசு நிறுவனம் உருவாக்கப்படும்.
- வட சென்னை வளர்ச்சித்திட்டம் ரூ.1000 கோடி செலவில் அடுத்த 3 ஆண்டுகளில் செயல்படுத்தப்படும்.
- சென்னை தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை அண்ணா சாலையில் ரூ.621 கோடியில் 4 வழி சாலையாக மேம்பாலம் கட்டப்படும் என்றும் சர்வதேச நிபுணர்களின் கருத்துக்கள் பெறப்பட்டு, நவீன அம்சங்களுடன் இந்த மேம்பாலம் கட்டப்படும் என்று நிதியமைச்சர் கூறினார்.
- சென்னை கண்ணகி நகர், பெரும்பாக்கம், நாவலூர், அத்திப்பட்டு ஆகிய இடங்களில் உள்ள மீள்குடியேற்ற காலனிகளில் 20 கோடி ரூபாய் செலவில் விளையாட்டு மையங்கள் அமைக்கப்படவுள்ளது.
- சென்னையில் ரூ.320 கோடி செலவில் வெள்ளத்தடுப்பு, நீர் வழித்தட மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும்.
- ஏபிசி திட்டத்தை வலுப்படுத்தவும், தெருநாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவும் விலங்குகள் நல வாரியத்துக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- கோவை மற்றும் மதுரைக்கு ‘எழில்மிகு கோயம்புத்தூர் மற்றும் மதுரை’ என்ற தலைப்பில் திட்டமிடப்பட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைந்த திட்டங்கள் தொடங்கப்படும்.
- அடையாறு-கூவம் ஆறுகளின் 44 கிமீ நீளத்தை அழகுபடுத்தும் மற்றும் தூய்மைப்படுத்தும் பணிகள் ரூ.1,500 செலவில் மேற்கொள்ளப்படும். அடையாறு ஆற்றின் இருபுறமும் பூங்காக்கள் அமைக்கப்படும்.
- கோவையில் செம்மொழிப்பூங்கா 2 கட்டங்களாக அமைக்கப்படும்.
- மரக்காணத்தில் 25 கோடி ரூபாய் நிதியில் சர்வதேச பறவைகள் மையம் நிறுவப்படும்.
- 5,145 கி.மீ கிராமப்புற சாலைகள் ரூ.2000 கோடி மதிப்பீட்டில், முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படும்.
- தங்கம் மற்றும் கல்விக்கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களை தள்ளுபடி செய்ய ரூ.3,993 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- ஈரோடு மாவட்டத்தில் தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம் புதியதாக அமைக்கப்படவுள்ளது. இது மாநிலத்தின் 18வது சரணாலயமாக இருக்கும்.
- கடல் அரிப்பு மற்றும் கடல் மாசுபாட்டை குறைக்க ரூ.2000 கோடி மதிப்பீட்டில் ‘தமிழ்நாடு நெய்தல் மீட்சித்திட்டம்’ உலக வங்கி உதவியுடன் செயல்படுத்தப்படவுள்ளது.
- பொதுவிநியோகத்திட்டத்தில் உணவு மாணியத்திற்காக ரூ.10,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்க ரூ.320 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.30,000 கோடி அளவில் வங்கிக்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.24,712 கோடி வங்கிக் கடன் வழங்கப்பட்டுள்ளது.
- 18 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உதவும் வகையில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் காலை உணவு திட்டத்தை தொடங்கும்.
- மாற்றுத்திறனாளிகளுக்காக மாத ஓய்வூதியம் ரூ.1500 ஆகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு நிதியுதவித் தொகை ரூ.2000 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
- முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டின் 18 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள்.
- சென்னையில் ஜவஹர்லால் நேரு திறந்தவெளி விளையாட்டு அரங்கத்தை மேம்படுத்த ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- ஆதிதிராவிடர், பழங்குடியின பிரிவு மாணவர்களுக்கு 4 புதிய விடுதிகள் நவீன வசதிகளுடன் கட்டப்படும் என்றும் இதன் பராமரிப்பு பணிகள் நிபுணத்துவம் வாய்ந்த நிறுவனங்களிடம் அமைக்கப்படும் என்றும் கூறப்படுள்ளது.
- கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி சிப்காட் வளாகத்தில் ரூ.80 கோடி மதிப்பில் அதிநவீன திறன் மேம்பாட்டு மையம் அமைக்கப்படும்.
- பெருந்தலைவர் காமராஜர் கல்லூரி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், வரும் நிதியாண்டிலும் ரூ.200 கோடி செலவில் பாலிடெக்னிக், கலை அறிவியல் கல்லூரிகள் மேம்படுத்தப்படவுள்ளது.
- 54 அரசு ஐ.டி.ஐ.க்கள் திறன்மிகு தொழிற்பயிற்சி மையங்களாக மாற்றப்படும்.
- சென்னையில் சர்வதேச தரத்திலான விளையாட்டு மையம் அமைக்கப்படும்.
- இந்து சமய அறநிலையத்துறை, வனத்துறையின் கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளும், பள்ளிக்கல்வித்துறையின் கீழ் கொண்டு வரப்படும், இந்த பள்ளிகளில் பணியாற்றும் அனைவரின் பணிப்பலன்கள் பாதுகாக்கப்படும்.
- மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ரூ.18,661 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக்கல்லூரியை மேம்படுத்த ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- சென்னை கிண்டியில் கட்டப்படும் 1000 படுக்கை வசதி கொண்ட கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனை இந்தாண்டு திறக்கப்படும்.
- மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் ஜூன் மாதம் திறக்கப்படவுள்ளது.
- தொழிற்சாலைகளில் பணியாற்றுவோருக்கும் மக்களை தேடி மருத்துவம் திட்டம் விரிவு செய்யப்படும்.
- இலங்கை மறுவாழ்வு முகாம்களில் மீதமுள்ள 3,959 வீடுகள் கட்ட வரும் நிதியாண்டில் ரூ.223 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் படைவீரர்கள் நலன்:
போர் மற்றும் போர் சார்ந்த நடவடிக்கைகளில் உயிரிழந்தால் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்களுக்கு வழங்கப்படும் ரூ.20 லட்சம் நிதியுதவி ரூ.40 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
தமிழ் வளர்ச்சித்துறை அறிவிப்புகள்:
- வயது முதிர்ந்த மேலும் 590 தமிழறிஞர்களுக்கு இலவச பேருந்து பயணம்.
- தமிழ் கணினி பண்பாட்டு மாநாடு நடத்தப்படும்.
- தஞ்சாவூரில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
- இந்தி திணிப்பு எதிர்ப்புக்காக உயிர் நீத்த நடராஜன், தாளமுத்து இருவருக்கும் சென்னையில் நினைவிடம்.
- அண்ணல் அம்பேத்கரின் புத்தகங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்படும்.
- அண்ணல் அம்பேத்கரின் புத்தகங்களை தமிழில் மொழி பெயர்த்திட ₹5 கோடி நிதி ஒதுக்கீடு.
வருவாய் பற்றாக்குறை :
கடும் நிதி நெருக்கடியிலும் மிகக்கடினமான சீர்திருத்தங்களை மேற்கொண்டு, வருவாய் பற்றாக்குறையை ரூ.62,000 கோடியில் இருந்து ரூ.30,000 கோடியாக குறைத்துள்ளோம், வரும் ஆண்டுகளில் இது மேலும் குறைக்கப்படும்.
அதிமுக வெளிநடப்பு :
தமிழக சட்டப்பேரவையில் 2023-24க்கான பட்ஜெட் உரையை புறக்கணித்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் போது ஜனநாயக படுகொலை நடந்ததாக கூறி தமிழக சட்டசபையில் இருந்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல்:
தமிழக சட்டப்பேரவையில் 2023-24க்கான நிதிநிலை அறிக்கையை நிதி மற்றும் மனிதவள வேளாண்மைத்துறை அமைச்சர் பிடி ஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார். இது நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்யும் 2-வது முழு பட்ஜெட் தாக்கல் மற்றும் அவர் தாக்கல் செய்யும் 3-வது பட்ஜெட் ஆகும்.