INDvsAUS ODI: ஆஸ்திரேலியா அபார பந்துவீச்சு; இந்தியா 117 ரன்களுக்கு ஆல் அவுட்.!
இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற 118 ரன்கள் இலக்கு.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது. முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வென்றுள்ளதால் தொடரில் 1-0 என்ற நிலையில் முன்னிலை வகிக்கிறது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியில் ரோஹித் சர்மா மற்றும் கில் இருவரும் களம் இறங்கினர். ஆட்டத்தின் முதல் ஒவரிலேயே ஸ்டார்க் வீசிய பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் கில் ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து கேப்டன் ரோஹித் சர்மா 13 ரன்களில் ஸ்டார்க் பந்தில் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். சூர்யகுமார் யாதவும்(0 ரன்) வந்தவேகத்தில் முதல் பந்திலேயே ஸ்டார்க்கிடம் விக்கெட்டை பறிகொடுத்தார். ஓரளவு நிலைத்து ஆடிய விராட் கோலி 31 ரன்களில் ஆட்டமிழக்க மற்ற வீரர்களும் பெரிய அளவில் ரன்கள் குவிக்க தவறினர்.
இதனால் இந்திய அணி 26 ஓவர்களில் 117 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அக்சர் பட்டேல்(29* ரன்கள்) ஓரளவு நின்று விளையாடி இந்திய அணியின் ஸ்கோரை 117 ரன்களுக்கு உயர்த்தினார். ஆஸ்திரேலியா சார்பில் ஸ்டார்க் 5 விக்கெட்களும், சான் அப்பாட் 3 விக்கெட்களும், நேதன் எல்லிஸ் 2 விக்கெட்களும் வீழ்த்தினர். ஆஸ்திரேலியா வெற்றி பெற 118 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.