ஐசிசி இதனை மீண்டும் யோசிக்கவேண்டும்; சச்சின் பரிந்துரை.!
பந்துகளில் மீண்டும் எச்சில் பயன்படுத்த சர்வதேச கிரிக்கெட்(ICC) கவுன்சிலுக்கு, சச்சின் டெண்டுல்கர் பரிந்துரை செய்துள்ளார்.
கிரிக்கெட் பந்துகளில் மீண்டும் எச்சில் பயன்படுத்துவதற்கு, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் ஜாம்பவானுமான சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு பரிந்துரை செய்துள்ளார். ஐசிசி கடந்த 2020இல் கொரோனா தொற்று பெருகி வந்த நிலையில் பந்துகளில் எச்சில் பயன்படுத்த தடை விதித்து அதற்கு பதிலாக வியர்வை பயன்படுத்துமாறு அறிவித்திருந்தது.
இந்த நிலையில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், பந்துகளில் எச்சில் பயன்படுத்த தடை விதித்திருந்த ஐசிசி, தனது முடிவை மீண்டும் ஒருமுறை யோசிக்கவேண்டும் என கூறியுள்ளார். மேலும் எச்சில் பயன்படுத்தினால் எதிரணிக்கு 5 ரன் பெனால்டி வழங்கும் முறையும் ஐசிசி அறிமுகப்படுத்தியிருந்தது.
இது குறித்து மேலும் கூறிய சச்சின், நான் மருத்துவ ரீதியாக நிபுணர் கிடையாது, ஆனால் நாம் பந்துகளில் எச்சில் பயன்படுத்துவது 100 ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கிறது, அப்போதெல்லாம் யாருக்கும் ஒன்றும் நேரவில்லை, பந்து புதிதாக இருக்கும்போது எச்சில் மிகவும் முக்கியமாக தேவைப்படுகிறது.
பந்து ஸ்விங் செய்வதற்கும் எச்சில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்று சச்சின் டெண்டுல்கர் தனது கருத்து தெரிவித்துள்ளார். மேலும் ஆஸ்திரேலிய கேப்டன், பேட் கம்மின்ஸ் இந்த தடைக்கு எச்சிலுக்கு பதிலாக கெமிக்கல் மெழுகு பயன்படுத்துவதற்கும் ஐசிசி இடம் அனுமதிக்குமாறு கோரியிருந்தார்.