ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனக்கு வந்த முதல் கருணை மனுவை நிராகரித்தார்..!
பீகார் மாநிலம், வைசாலி மாவட்டதில் உள்ள ரகோர்பூர் கிராமத்தை சேர்ந்த விஜேந்திர மஹ்டோ, கடந்த 2005-ம் ஆண்டு தமது எருமை மாட்டை திருடினார்கள் என ராய், வசிர் ராய் மற்றும் அஜய் ராய் ஆகியோர் மீது போலீசில் புகார் அளித்தார். அதைத்தொடர்ந்து, ராய் என்பவர் தன் மீது போலீசில் கொடுத்த புகாரை வாபஸ் வாங்க வேண்டும் என விஜேந்திர மஹ்டோவிற்கு அழுத்தம் கொடுத்தார்.
இதற்கு, உடன்படாத காரணத்தினால் விஜேந்திர மஹ்டோவின் வீட்டிற்கு ராய் நெருப்பு வைத்து கொலை செய்ய முயன்றார். இதில், மஹ்டோ, அவரது மனைவி மற்றும் அவரது 5 குழந்தைகள் உடல்கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேரை கொலைசெய்த காரணத்தால் ராய்க்கு மாவட்ட நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கியது.
இதை எதிர்த்து கடந்த 2013-ம் ஆண்டு உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் ராய் மேல்முறையீடு செய்தார். ஆனால் ராயின் மனுவை நிராகரித்து அவரின் தூக்கு தண்டனையை நீதிமன்றம் உறுதி செய்தது.
இந்நிலையில், தூக்கு தண்டனையில் இருந்து விடுவிக்க கோரி ராய், ஜனாதிபதி ராம் நாத் கோவிந்துக்கு கருணை மனு எழுதியிருந்தார். பரிசீலனையில் இருந்த மனுவை கடந்த ஏப்ரல் மாதம் 23-ம் தேதி ஜனாதிபதி நிராகரித்து விட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம், ஜானாதிபதியாக ராம் நாத் கோவிந்த் பதவியேற்ற பின் நிராகரிக்கும் முதல் கருணை மனு இது என்பது குறிப்பிடத்தக்கது.