10ம் வகுப்பு தேர்வுத் தாள் கசிவு..! எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சட்டசபையில் கடும் எதிர்ப்பு..!
10ம் வகுப்பு தேர்வுத் தாள் கசிந்ததைக் கண்டித்து அசாம் சட்டசபையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு.
அசாம் சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடரில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அறிவியல் வினாத்தாள் கசிந்தது தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அசாமில் நடைபெற்ற 10 ஆம் வகுப்பு மாநில வாரியத் தேர்வின் பொது அறிவியல் வினாத்தாள் கசிந்ததாகவும், தேர்வு ரத்து செய்யப்பட்டதாகவும் அஸ்ஸாம் அரசு தெரிவித்தது.
மேலும், இது தொடர்பாக காவல்துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, சிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மாநில கல்வி அமைச்சர் ரனோஜ் பெகு தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று நடைபெற்ற அசாம் மாநில சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில், மாநில வாரியத் தேர்வுக்கான பத்தாம் வகுப்பு பொது அறிவியல் வினாத்தாள் கசிந்த சம்பவம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் டெபப்ரதா சைகியா விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்தார். ஆனால் சபாநாயகர் பிஸ்வஜித் டைமேரி எந்த விவாதத்தையும் அனுமதிக்கவில்லை.
இதனையடுத்து அவையில் கடும் அமளி நிலவியது. அவர் “இதே போல மார்ச் 5ஆம் தேதியும் 10ஆம் வகுப்புத் தேர்வின் ஆங்கிலத் தாள் கசிந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், கல்வித் துறை அமைச்சர் தவறான செய்திகளை பரப்புவதாக ஊடகங்கள் மீது குற்றம் சுமத்தினார். அப்பொழுதே முன்னெச்சரிக்கையாக இருந்திருந்தால் இன்று பொது அறிவியல் தாள் கசிந்திருக்காது” என்று கூறினார். இதைத் தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் சபாநாயகர் பிஸ்வஜித் டைமேரி பத்து நிமிடங்களுக்கு சபையை ஒத்திவைத்தார்.