வஜிராபாத் நீர்நிலையத்தில் மோசமான சுகாதாரம்..! டெல்லி முதல்வருக்கு கவர்னர் கடிதம்..!
டெல்லி வஜிராபாத் நீர்நிலையத்தில் மோசமான சுகாதாரம் குறித்து முதல்வருக்கு லெப்டினன்ட் கவர்னர் கடிதம் எழுதியுள்ளார்.
நீர் சுத்திகரிப்பு நிலையத்தை பார்வையிடல் :
புதுடெல்லியின் பெரும்பாலான பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் வஜிராபாத் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மோசமான சுகாதார நிலைமைகள் குறித்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லியின் லெப்டினன்ட் கவர்னர் வி.கே.சக்சேனா கடிதம் எழுதியுள்ளார். டெல்லியின் லெப்டினன்ட் கவர்னர் வி.கே.சக்சேனா நேற்று வஜிராபாத் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஆலையை பார்வையிட்டார். இதனை பார்வையிட்ட பின்னர் ஆலையின் மோசமான நிலைமை குருத்து தனது கவலையை வெளிப்படுத்தினார்.
லெப்டினன்ட் கவர்னர், முதல்வருக்கு கடிதம் :
கெஜ்ரிவாலுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், வஜிராபாத் மற்றும் சந்திராவால் நீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு தண்ணீர் வழங்கும் வசிராபாத் தடுப்பணைக்கு பின்னால் உள்ள குளம், 8 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருப்பதைக் குறிப்பிட்டார். மேலும், குளம் 250 மில்லியன் கேலன் தண்ணீரைத் தேக்கி வைக்கும் திறன் கொண்டது. ஆனால் தற்போது வண்டல் மண் படிந்ததால் 93 சதவீதம் குறைந்துவிட்டது. இப்போது 16 மில்லியன் கேலன்கள் மட்டுமே தேக்க முடியும் என்றும் இந்த அலட்சியப் போக்கிற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
என்ன வகையான தண்ணீர் வழங்கப்படுகிறது.?
அந்த கடிதத்தில் டெல்லி மக்களுக்கு என்ன வகையான தண்ணீர் வழங்கப்படுகிறது என்று சக்சேனா கேட்டுள்ளார். “தண்ணீரின் தரம் என்ன, அது உண்மையில் குடிக்கக் கூடியதா? என்றும் டெல்லி மக்களுக்கு அசுத்தமான தண்ணீரை விநியோகிப்பதன் மூலம் நாம் அவர்களின் ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கையுடன் விளையாடவில்லையா? என்றும் கேட்டுள்ளார். நாட்டின் தேசிய தலைநகரில் இது நியாயமானதா? எனவும் டெல்லி ஜல் போர்டு (DJB) அதன் சேமிப்புக் குளங்களைத் சுத்தப்படுத்தவில்லையா?” என்று எல்ஜி சக்சேனா தனது கடிதம் மூலம் கேள்வி எழுப்பியுள்ளார்.