கர்நாடகா தேர்தல்! இவர்களுக்கு வீட்டிலிருந்து வாக்களிக்கும் வசதி – தேர்தல் அதிகாரி அறிவிப்பு
வீட்டிலிருந்து வாக்களிக்கும் வசதியை ஏற்படுத்தித் தர உள்ளோம் என்று தலைமை தேர்தல் அதிகாரி ராஜீவ் குமார் அறிவிப்பு.
சட்டப்பேரவை தேர்தல்: கர்நாடக சட்டப்பேரவையின் பதவிக் காலம் வரும் மே 24ம் தெய்தியுடன் முடிவடைய உள்ள நிலையில், அதற்கு முன்பாக, தேர்தல் நடத்தி புதிய அரசு பொறுப்பேற்க வேண்டும் என்பது தேர்தல் விதிமுறை. இதனால் கர்நாடக சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கலாம் என்ற நிலை தற்போது உள்ளது.
மும்முனை போட்டி: கர்நாடக மாநிலத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தனித்தனியாக களமிறங்குகின்றன. இந்தத் தேர்தலுக்கு பாஜகவின் தேர்தல் இணை பொறுப்பாளராக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார்.
தேர்தல் அதிகாரி: எனவே, கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், பெங்களூருவில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய இந்திய தலைமை தேர்தல் அதிகாரி ராஜீவ் குமார், கர்நாடக சட்டப் பேரவையின் பதவிக்காலம் மே 24 வரை உள்ளது. எனவே, புதிய சட்டசபை அமைய வேண்டும், அதற்கு முன் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்.
12D படிவம்: கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு முதன்முறையாக, கர்நாடகாவில் 80 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் விரும்பினால், அவர்களது வீட்டிலிருந்தும் வாக்களிக்கும் வசதியை வழங்க உள்ளோம். 12D படிவம் உள்ளது. தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியான 5 நாட்களுக்குள் இந்த வசதி செய்து தரப்படும். இதனால் 80+ அல்லது மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் வீட்டில் இருந்தபடியே வாக்களிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.